இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், முன்னாள் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவருமான கன்யா குமாரும், குஜராத்தை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோரும் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை கட்சியின் முக்கிய தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் முன்னிலையில் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் கட்சியில் இணையும் தேதி பகத் சிங்கின் பிறந்தநாள் என்பதால் கட்சிக்கு கூடுதல் பலமாக மாறுவார்கள் என சொல்லப்படுகிறது.
தலித் சமூகத்தை சேர்ந்த மேவானி(41), குஜராத் வட்கம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஹர்திக் மற்றும் அல்பேஷ் தாகூர் ஆகியோருடன் இணைந்து இளம் கூட்டணியாக கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கோட்டையான குஜராத்தில் தனித்து நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, 34 வயதான கன்யா, மோடி அரசுக்கு எதிரான உரைகளால் தேசிய கவனத்தை ஈர்த்த முன்னாள் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் ஆவார். பின்னர் சிபிஐ வேட்பாளராகக் களமிறங்கித் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
இதுதொடர்பாக பேசிய குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல், “நாட்டுக்காக உழைக்க மற்றும் காங்கிரஸை வலுப்படுத்த விரும்பும் அனைத்து புரட்சிகர தலைவர்களும் வரவேற்கப்படுகிறார்கள். தனிப்பட்ட லட்சியங்கள் மற்றும் சவால்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும். எனது பழைய நண்பரான மேவானி வருகை, மாநிலத்திலும் தேசிய அளவிலும் காங்கிரஸை வலுப்படுத்தும் என்றார்.
அதே சமயம், “தனிப்பட்ட லட்சியங்கள்” பற்றிய ஹர்திக்கின் குறிப்பு சுவாரஸ்யமானது. காங்கிரஸுக்குள் அவருக்கு ஏற்பட்ட அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அவர் பாஜகவுக்கு எதிராக வெற்றிகரமான பட்டீடர் போராட்டத்தை நடத்திய பிறகு 2019 இல் காங்கிரஸில் சேர்ந்தார். தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், மாநில தலைமை தனக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை என்றும் “என்னை கீழே இழுக்க” முயல்வதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் பாஜக தனது முழு அமைச்சகத்தையும் மாற்றுவதற்கு முன்பே மேவானி காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது, அவரது தேர்வு சாதி அரசியலுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. பாஜகவின் புதிய முதலமைச்சர் படேல் ஆவார். அதே நேரத்தில் ஆம் ஆத்மி அடுத்த ஆண்டு தேர்தலுக்கு செல்லும் மாநிலத்தின் சமூகம் மீது கவனம் செலுத்துகிறது. ஓபிசி மற்றும் தலித்துகளைக் கவரும் முயற்சியில் காங்கிரஸ் வியூகம் தெரிகிறது. குஜராத்தில் தலித் போராட்டத்தின் முகமாக இருந்தவர் மேவானி என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் அடுத்தாண்டும், மக்களவைக்கு 2024ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மேவானியையும், கன்யாவையும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி மற்றும் லலிதேஷ்பதி திரிபாதி போன்ற பல இளம் தலைவர்கள் வெளியேறியுள்ள நிலையில், இவர்கள் இருவரின் வருகை கூடுதல் பலம் சேர்க்கும் என்றும், பயன்படுத்தப்போகும் முதல் போர்க்களம் உத்தரப் பிரதேசமாகத் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.