Advertisment

ஜாதி வாரி கணக்கெடுப்பு, 50% இட ஒதுக்கீடு: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள் என்ன?

குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி-க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவது ஆகியவை காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் அடங்கும்.

author-image
WebDesk
New Update
Congress Manifesto 2024 Highlights and key promises in tamil

மக்களவைத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Congress Manifesto | All India Congress | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Congress Manifesto 2024 Highlights: What are the key promises?

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் ‘நியா பத்ரா’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

5 "நீதித் தூண்களில்" (யுவ நீதி, நாரி நியாய், கிசான் நியாய், ஷ்ராமிக் நீதி மற்றும் ஹிஸ்சேதாரி நீதி) கவனம் செலுத்த இருப்பதாகவும், அவற்றின் கீழ் 25 உத்தரவாதங்கள் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்பயிற்சி பெறும் உரிமை, குறைந்தபட்ச ஆதார விலைக்கான (எம்.எஸ்.பி) சட்டப்பூர்வ உத்தரவாதம், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி-க்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவது ஆகியவை மக்களவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் அடங்கும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்:- 

* நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

* மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கான பணி 2025ம் ஆண்டு தொடங்கப்படும்.

* மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகளை நிரப்புவோம்

* மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும்

* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.

* அங்கன்வாடி ஊழியர்கள் இரட்டிப்பாக்கப்படும். கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை களையும் வகையில் ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்.

* தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் அமைக்கப்படும்.

* 21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் மறு ஆய்வு செய்யப்படும்.

* அனைத்து மொழிகளிலும் பிரெய்லி மற்றும் சமிக்ஞை அங்கீகரிக்கப்படும்.

* தன்பாலின ஈர்ப்பாளர்கள் சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

* ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.

* டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தொகை வழங்கப்படும்.

* ராணுவ ஆள்சேர்ப்புக்காக கொண்டு வரப்பட்ட அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.

* மார்ச் 15 2024 வரை செலுத்தப்படாமல் உள்ள மாணவர்களின் கல்விக் கடன் வட்டியுடன் ரத்து செய்யப்படும்.

* 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

* 12ம் வகுப்பு வரை கல்வியை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும்.

* சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்குள் நிரப்பப்படும்.

* சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளாக அதிகளவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

* நீட், கியூட் தேர்வுகள் கட்டாயமில்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர்கள் சேர்க்கையை கடைபிடிக்கலாம்

* பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சாதியினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

* அரசு பணிக்கான விண்ணப்ப கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படும்.

* நீட் தேர்வு மறு பரிசீலனை செய்யப்படும்.

* நீட் தேர்வு நடத்தலாமா வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.

* மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து, புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்

* கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் உச்சவரம்பு ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்படும்.

* மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

* ஜி.எ.ஸ்டி கவுன்சில் மாற்றி அமைக்கப்படும்

* பா.ஜ.க அரசின் ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்பட்டு ஜிஎஸ்டி 2.ஓ கொண்டு வரப்படும்.

* விவசாய இடபொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது.

* எம்.பி., எம்.எல்.ஏ., கட்சித்தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்

* மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க புதிய சட்டம்

* ரெயில்களில் ரத்து செய்யப்பட்ட முதியோர் கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும்

* பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே வேலை ஒரே சம்பளம் திட்டம் அமல்படுத்தப்படும்.

* காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்

* மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்

* ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படாது

* டெல்லி அரசின் ஆலோசனையை ஏற்று துணை நிலை கவர்னர் செயல்படும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

* நாடு முழுவதும் சுங்கக்கட்டணம் குறைக்கப்படும்

* அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும்

* நீதிபதிகள் நியமனத்திற்கு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படும்.கொலிஜியம் முறை நீக்கப்படும்

* மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை வழங்க புதிய வழிமுறை கொண்டு வரப்படும்

* அண்டை நாடுகளால் மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்

* மாநில அரசுகளுடன் ஆலோசித்து, பொதுப்பட்டியலில் உள்ளவை மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்

* நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

All India Congress Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment