ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டணி அரசை கவிழ்க்க சதித் திட்டங்கள் தீட்டியதாக கடந்த சனிக்கிழமை மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், சில நபர்கள் தன்னை அணுகி ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி அரசை கவிழ்க்க ரு.1கோடி தருவதாக பேரம் பேசியதாகவும், மத்திய மந்திரி சபையில் இடம் தருவதாக கூறியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கோலிபிரா எம்.எல்.ஏ நமன் பிக்சல் கொங்காரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், " எனது கட்சி தொண்டர்கள் மூலம் மூன்று பேர் என்னை பல முறை அணுகினர். சில நிறுவனங்களில் பணிபுரிவதாகக் கூறி அணுகியபோது நான் அவர்களை வெளியேற சொன்னதும் ரூ.1கோடிக்கும் மேல் ரொக்கமாக தருவதாக என்னிடம் கூறினர். நான் உடனடியாக CLP <காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி> தலைவர் ஆலம்கீர் ஆலம் மற்றும் காங்கிரஸ் ஜார்க்கண்ட் பொறுப்பாளர் ஆர் பி என் சிங் ஆகியோருக்கு தகவல் கொடுத்தேன். இது குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கும் தெரிவித்துள்ளேன்" என கூறினார்.
இதுதொடர்பாக ஆர் பி என் சிங்கை தொடர்பு கொண்டபோது: "இந்த விஷயங்களை பத்திரிகைகளுடன் விவாதிக்க முடியாது" என்றார். முதலமைச்சர் சோரன் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக மவுனம் காத்து வருகிறார்.
கொங்காரி மேலும் கூறுகையில், "அந்த நபர்கள் என்னை அணுகியபோது பணத்தைத் தவிர, அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் சிறுபான்மை மற்றும் பழங்குடி விவகாரங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கூறினர். பாஜகவிற்காக இதை செய்வதாக கூறினார்கள். எனினும் பாஜகவை சேர்ந்த யாரும் என்னை அணுகவில்லை" என்றார்.
மேலும் தன்னிடம் பேரம் பேசிய நபர்களின் முகம் நினைவில் இல்லை என எம்எல்ஏ கூறினார். இதனால் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், எம்எல்ஏவை அணுகியவர்களும் ஒரே நபர்களா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை.
காங்கிரஸ் பேரமோ எம்.எல்.ஏ குமார் ஜெய்மங்கல் அளித்த புகாரின் பேரில் ராஞ்சியின் கோட்வாலி காவல் நிலையத்தில் அபிஷேக் துாபே, அமித் சிங் மற்றும் நிவாரண் பிரசாத் மஹாதோ ஆகிய மூன்று பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட நிவாரண் பிரசாத் மஹாதோவின் முகநூல் பக்கத்தில், பாஜகவின் தன்பாத் எம்.பி. பசுபதி நாத் மற்றும் சில உள்ளூர் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளன. மஹாதோ கட்சியுடன் தொடர்புடையவரா என ஜார்க்கண்ட் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாஹ்தியோவிடம் கேட்டபோது " எனக்கு தெரிந்து அவர் பாஜக உறுப்பினர் இல்லை" என பதிலளித்தார்.
ஷாஹ்தியோ சிபிஐ விசாரணை கோரியபோது, முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பாபுலால் மராண்டி, காவல்துறையினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். காவல்துறையினர் இதுவரை இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்கவில்லை என்றும் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அரசை கவிழ்க்க சதி திட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு செய்திகுறிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளது என கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.