கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மே 15 ஆம் தேதி வெளியாகியது. இதில், பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக முயற்சித்த நேரத்தில், 78 இடங்களில் வெற்றி காங்கிரஸ் கடைசி நேரத்தில், மஜக உடன் கூட்டணி அமைத்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், கர்நாடக ஆளுநர் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, நேற்று (17.5.18) காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதே சமயத்தில் எடியூரப்பாவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் மாயமாகி உள்ளன. அந்த எம்எல்ஏக்களை காங்கிரஸ் தலைவர்களால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவர்கள் ராஜினாமா செய்யவுள்ளதாகவவும் கூறப்படுகிறது.
காங்கிரசின் பிரதாப் கவுடா, ஆனந்த்சிங் ஆகிய 2 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 63 வயதாகும் பிரதாப் கவுடா பாட்டீல், கர்நாடகாவின் ஏழ்மையான எம்எல்ஏ என பெயர் பெற்றவர்.