காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் பாஜகவில் இணைந்து அமைச்சராகி வரும் சூழ்நிலையில், 10க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைய தயாராக இருப்பதாக கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையாவும், கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமாரும் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இவர்களது கூற்றை காங்கிரஸிருந்து பாஜகவில் இணைந்த நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
கேபினட் அமைச்சர்களான முனிரத்ன நாயுடு, கே.சுதாகர் ,எஸ்.டி.சோமசேகர் ஆகியோர் மீண்டும் காங்கிரஸுக்கு செல்ல மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். முனிரத்னா கூறுகையில், நானும் எனது நண்பர்களும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல மாட்டோம். அப்படி நாங்கள் செல்லும் பட்சத்தில், சித்தராமைய்யா அங்கு இருக்க மாட்டார்" என்றனர்.
முன்னதாக, பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக, கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாஜக மேலிடம் கிரீன் சிக்னல் கொடுத்தால், அவர்கள் அனைவரும் பாஜகவில் இணைவார்கள் என பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள கே.சுதாகர், "முதலில் தங்களுடன் இணையவுள்ள பாஜக எம்எல்ஏக்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிடட்டும். 2023 தேர்தலை கருத்தில்கொண்டு, காங்கிரஸ் விளம்பரத்திற்காக இப்படி அறிக்கையை விடுகிறார்கள்" என்றார்.
சித்தராமையாவின் கூற்றை நிராகரித்த அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், "காங்கிரஸ் தலைவர்களுக்கு வேறு வேலை இல்லை. வெறுமனே ஊகங்களில் பணியாற்றுகிறார்கள். ஆனால் பாஜகவில் எங்களுக்கு வேலை இருக்கிறது. மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்ட செல்ல பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையவுள்ளவர்களின் விவரங்களை முதலில் வெளியிடுங்கள்" என்றார்.
மேலும் பேசிய சித்தராமையா, காங்கிரஸில் சேர விரும்பும் மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் தலைமை மற்றும் சித்தாந்தத்தை ஏற்க வேண்டும். அதற்கு ஒப்புக்கொண்டால், நாங்கள் அவர்களை வரவேற்போம். அவர்கள் பெயர்களை தற்போதைக்கு வெளியிடப் போவதில்லை" என தெரிவித்திருந்தார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், " கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவக்குமார் தன்னை முந்திவிட்டதாக நினைப்பதால்,பாதுகாப்பின்மை சித்தராமையாவை ஆட்டிப்படைக்கிறது. இருவருக்குமிடையிலான சண்டை, காங்கிரஸில் உள்ள பலரை வரும் நாட்களில் கட்சியை விட்டு வெளியேற வைக்கும்.பாஜகவில் இருந்து யாரும் காங்கிரஸில் சேரும் கேள்விக்கே இடமில்லை.
அதே போல், முதலில் சிவகுமார் பல பாஜக எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் தன்னுடன் இணைய உள்ளனர் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது தேர்தல் நெருங்கும்போது இணைவார்கள் என கூறுகிறார். இதிலே, அவர் முன்பு கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது.
பாஜகவை விட்டு வெளியேறும் எம்எல்ஏக்கள் யார் என்பது குறித்து காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. காங்கிரசுக்குள் உள்கட்சி பூசல் உள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளை வெளியிடுகின்றனர். அவர்கள் சொல்வதில் உண்மை இல்லை" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil