நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின்போது, வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ், மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்திருந்திருந்தார். அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். ஜூலை 20 (இன்று) விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்று அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு விவாதம் தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில், 266 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியும். பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் 312 ஆக உள்ளது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் தொடங்கிய போது, விவாதத்தை புறக்கணித்து பிஜூ ஜனதா தளம் கட்சியின் 19 எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதுமட்டுமின்றி, தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய போது, ஆந்திர மாநில பிரிவினை தொடர்பாக அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
மேலும், சிவ சேனா கட்சியும், இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் சிவ சேனா கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் இந்த விவாதத்திற்காக காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் கொண்டு வந்த தெலுங்குதேசம் கட்சிக்கு 13 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு 29 நிமிடங்களும், திரிணாமூல் காங்கிரசுக்கு 15 நிமிடங்களும், ஆளும் கட்சியான பாஜகவுக்கு 3 மணி நேரம் 33 நிமிடங்களும் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 38 நிமிடங்களை பயன்படுத்தி விவாதத்தை முடித்துவிட்டு, வாக்கெடுப்பு நேரத்தில் வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம். தங்களுக்கு போதிய பலம் இருப்பதாக சோனியா காந்தி 2 தினங்கள் முன்பு தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சி இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்...