உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
உ.பி.,யின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பொது செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக, சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
முன்னதாக, உ.பி சட்டப்பேரவையில் பெண்களுக்கு 40 விழுக்காடு இடம் கொடுக்கப்படும் என பிரியங்கா காந்தி கூறியிருந்த நிலையில், தற்போது பெண்களுக்கான பிரத்யேக வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், " என் அன்பு சகோதரிகளே, உங்களின் ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. இதை புரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சி பெண்களுக்கென தனி தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது
நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், ஆண்டுதோறும் மூன்று எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். மாநிலத்திற்குள் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்" என தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனக்கான அடித்தளத்தை உருவாக்கும் பணியை மேற்கொள்கிறது. குறிப்பாக, பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரச்சாரங்களில் பெண்களை கவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக கடந்த மாதம், 12 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த அனைத்து பெண்களுக்கும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்றும், பட்டதாரி பெண்கள் அனைவருக்கும் இலவசமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil