காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக அவர் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மருத்துவர்கள் அறிவுறுத்தலின் அடிப்படையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறார். இதனை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த ஜூன் மாதம் லேசான காய்ச்சல் மற்றும் இருமலால் அவதியுற்றார். தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கோவிட் பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூன் 20ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே மாதத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வேணுகோபால் ஆகியோரும் கோவிட் பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ttps://t.me/ietamil"