அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவருக்கான தேர்தல், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் திங்கள்கிழமை நடந்தது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
கடைசியாக 2000-இல் காங்கிரஸ் தலைவா் தோ்தல் நடைபெற்றது. அதில், ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து, தலைவா் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றார்.
இந்நிலையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில், மூத்த தலைவா்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூா் ஆகியோர் களத்தில் உள்ளனா். இதன்மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராத நபா், காங்கிரஸ் தலைவா் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 711 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இதற்காக சத்தியமூர்த்தி பவனில் ஏற்கனவே இருந்த அரங்கம் வாக்குச்சாவடி முகாமாக மாற்றப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் முதல் ஆளாக வாக்களித்தனர்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது. கட்சித் தலைவர் தேர்தலில் இரண்டாவது முறையாக வாக்களிப்பதாக கூறினார்.
தரூர் ஆதரவாளரான கார்த்தி சிதம்பரம் வாக்களித்த பிறகு, மக்கள் புதிய கண்ணோட்டம் கொண்ட ஒருவரைத் தேடுகிறார்கள். தரூர் தெளிவானவர், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மற்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்று கூறினார்
கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் ஆறாவது முறையாக நடைபெறும் தேர்தலுக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 65 வாக்குச் சாவடிகளில் சத்தியமூர்த்தி பவன் ஒன்றாகும்.
இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் நெருக்கம் காரணமாக கார்கே மிகவும் விருப்பமானவராகக் கருதப்படுகிறார், மேலும் மூத்த தலைவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார், அதே நேரத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எம்.பி. தரூர் தன்னை மாற்றத்தின் வேட்பாளராக முன் நிறுத்தியுள்ளார். தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, தரூர் சமச்சீரற்ற அரசியல் களத்தின் பிரச்சினைகளை எழுப்பினார்.
கார்கேவும், தரூரும் மாறுபட்ட நடத்தை கொண்டவர்கள் மட்டுமல்ல, வித்தியாசமான அரசியல் பயணத்தையும் கொண்டுள்ளனர்.
80 வயதான கார்கே ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசி ஆவார். அதே நேரத்தில் 66 வயதான தரூர் - தெளிவானவர், புலமை மிக்கவர் மற்றும் சாதுரியமானவர் - தனது கருத்தைப் பேசுவதில் பெயர் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையில் நீண்ட காலத்திற்குப் பிறகு 2009 இல் காங்கிரஸில் சேர்ந்தார்.
கார்கே பிதார் மாவட்டத்தில் உள்ள வரவட்டியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார், குல்பர்காவில் பள்ளிப்படிப்பு மற்றும் பிஏ மற்றும் சட்டப்படிப்பை முடித்தார். தரூர் லண்டனில் பிறந்தார் மற்றும் தனித்துவமான கல்வி பின்னணி கொண்டவர்.
திங்கட்கிழமை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19 அன்று வெளியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“