Chhattisgarh | congress | Rahul Gandhi: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 7ம் தேதி தொடங்கி வருகிற 30ம் தேதி வரை நடக்கிறது. இவற்றில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், சத்தீஸ்கரில் கடந்த 7ம் தேதி தொடங்கி வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலை ஒட்டி விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.15,000, கேஸ் சிலிண்டர் மானியம், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ரூ.10,000, நெல் மற்றும் டெண்டு இலைகள் கொள்முதல் செய்ய அதிக விலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓ.பி.எஸ்) செயல்படுத்துதல், மற்றும் இன்னும் பிற திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக அளித்துள்ளது.
ஆனால், இத்தனை திட்டங்களையும் ஆட்சியை அமைக்கப் போகும் அக்கட்சியின் அரசால் நிறைவேற்ற முடியுமா என்கிற கேள்வி தொற்றிக்கொண்டுள்ளது. அம்மாநிலத்தின் தற்போதைய நிதி மதிப்பீட்டின்படி, சத்தீஸ்கர் அரசு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வட்டியுடன், மொத்தமாக ரூ.89,000 கோடி கடன் வைத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Rs 40,000 crore a year: What Congress promises in Chhattisgarh may add up to
கடன் தள்ளுபடி உட்பட ஆளும் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல் ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.40,000 கோடியும், அதன்பிறகு ஆண்டுக்கு ரூ.30,000 கோடியும் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, சத்தீஸ்கரின் ஆண்டு பட்ஜெட் சுமார் 1 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
சத்தீஸ்கர் மாநில கருவூலத்தில் காங்கிரஸின் வாக்குறுதியளிக்கப்பட்ட திட்டங்களின் சுமை பற்றி கேட்டதற்கு, முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடந்த மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் அளித்த பேட்டியில், “கடன்களின் மொத்த வட்டியின்படி நாங்கள் வழிகாட்டுதல்களுக்குள் இருக்கிறோம். மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதத்தில் 16% ஆக உள்ள நமது கடன் 25%க்குக் கீழே உள்ளது.
2030 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுமார் ரூ. 22,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செலவு பற்றி அவர் பேசுகையில், “2070-க்குப் பிறகு, சில சுமை இருக்கும். ஆனால், இப்போது 50 ஆண்டுகளுக்கு, எந்த சுமையும் இருக்காது." என்று கூறினார்.
காங்கிரஸ் வாக்குறுதியளித்த ஒரு முறை விவசாயக் கடன் தள்ளுபடியும் கூடுதல் செலவாக வரும். 2019 ஆம் ஆண்டில், 19 லட்சம் விவசாயிகளுக்கு மாநில அரசு சுமார் 9,500 கோடி ரூபாய் செலவு செய்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவான புதிய கொள்கைகளால் இது அதிகரிக்க உள்ளது. ஏனெனில், 2017-2018ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 15.77 லட்சத்தில் இருந்து இப்போது கிட்டத்தட்ட 25 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து ஊடகங்கள் முன்பு கேள்வி எழுப்பியபோது, “தொழிலதிபர்களின் 14.50 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் போது, விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்ய கூடாது?” என்று பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பினார்.
3.55 லட்சம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 355 கோடி ரூபாய் செலவாகும். அதன்பின், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி, தோராயமாக ரூ.250 கோடியும், போக்குவரத்துத் தொழிலதிபர்களுக்கு ரூ.726 கோடியும் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவை கூட்டத்திலே கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்போம் என்றார். ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு 23,000 கோடி ரூபாய் இடுபொருள் மானியமாக மாநில அரசு வழங்கியது என்றும், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் எம்.எஸ்.பி உட்பட 15 குவிண்டால் நெல் 2,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாகவும் அவர் கூறினார். இப்போது, 20 குவிண்டால் நெல்லை ரூ.3,200க்கு (எம்.எஸ்.பி உட்பட) கொள்முதல் செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், 1.07 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய, 8,700 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், கூடுதல் நெல் கொள்முதல் வாக்குறுதியாலும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 கோடி தேவைப்படும்.
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 என்ற அறிவிப்பு, வருங்கால காங்கிரஸ் அரசு அதற்கான நிபந்தனைகளை வகுக்கவில்லை எனில், 1.02 கோடி பெண்களுக்கு வழங்க வேண்டும். இது ஆண்டுக்கு ரூ.15,385 கோடியாகிறது.
கேஸ் சிலிண்டர்கள் மீதான மானியம் ரூ.500 என 50 லட்சம் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கேஸ் சிலிண்டர் வாங்கினால், அரசுக்கு ரூ.250 கோடி செலவாகும்.
காங்கிரசின் மற்றொரு வாக்குறுதியான 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பது மாநில கருவூலத்திற்கு ஆண்டுக்கு குறைந்தது 3,000 கோடி ரூபாய் செலவு வைக்கும். அத்துடன் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி செலவாகிறது.
பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பேருந்து சேவை, "மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை" இலவசக் கல்வி, அனைத்துப் பள்ளிகளையும் ஆங்கில வழிக் கல்வியாக மாற்றுவது, வன விளைச்சலுக்கு கூடுதல் பணம், டெண்டு இலைகளுக்கு போனஸ் போன்ற வாக்குறுதிகளும் உள்ளன. சுமார் 12.94 லட்சம் குடும்பங்கள் டெண்டு இலைகளை சேகரிக்கின்றன.அதாவது ஒவ்வொரு ஆண்டும் போனஸ் தொகையாக ரூ.517 கோடியும், டெண்டு வசூலுக்கு ரூ.776 கோடியும் செலவிடப்பட உள்ளது.
ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சையும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் இலவச சிகிச்சை, விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை, 17.50 லட்சம் பேருக்கு முக்ய மந்திரி ஆவாஸ் யோஜனா, தொழில் தொடங்க மானியம் எனவும் அறிவித்துள்ளது.
நலத் திட்டங்கள் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு, தேவைப்படுபவர்களை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ராய்ப்பூரில் உள்ள பண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகம் பேராசிரியர் ரவீந்திர பிரம்மே பேசுகையில், “தேவையில்லாதவர்களுக்கு இலவசங்களை வழங்குவதன் மூலம் மாநில கருவூலத்தை சுமையாக மாற்றக்கூடாது” என்று கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத சத்தீஸ்கர் அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் ஒருவர் பேசுகையில், “மாநிலத்திற்கு போதுமான வருவாய் இல்லாததால், இந்த வாக்குறுதிகளுக்காக அது தடையின்றி கடன் வாங்க வேண்டியுள்ளது. இது பெருகிய கடன் சுமைக்கு வழிவகுக்கும். இது ஒரு தீய சுழற்சியை ஏற்படுத்துகிறது, கடன் சேவைக்கு அதிக கடன்கள் தேவைப்படுகின்றன. இது பொருளாதாரத்தின் மந்தநிலைக்கும் வழிவகுக்கிறது. ஏனெனில் சொத்துக்களை உருவாக்க மூலதனச் செலவினங்களுக்கு எதுவும் மிச்சமில்லை." என்று கூறினார்.
காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா பேசுகையில், வாக்குறுதிகளை வெறும் இலவசங்களாகப் பார்ப்பது தவறு என்றும், அவை வலுவான சத்தீஸ்கரை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். “நாம் தொற்றுநோயிலிருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறோம். மேலும் விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் வரிகளால் நாடு அவதிப்படும்போது கொள்கைகள் தேவை. மாநிலத்தின் இயற்கை வளங்கள் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்க அனுமதிப்பதால் இலவச மின்சாரம் நம் மக்களுக்கு இழப்பீடு அதிகம். மாணவர்கள் இந்நாட்டின் சொத்தாக மாற வேண்டும் என்பதற்காக இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கு வழங்கப்படும் பணம் அவர்கள் குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளின் படிப்புக்கான பணத்தை சேமிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது." என்றும் அவர் கூறினார்.
பா.ஜ.க-வும் திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000, நெல் விலை ஏக்கருக்கு ரூ.3,100-க்கு 21 குவிண்டால், கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.500 வழங்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கேதார் குப்தா பேசுகையில், “பெண்களுக்கான பண உதவி என்பது பா.ஜ.க-வின் முதல் நிலைப்பாடாகும். பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அவர்களைத் தன்னம்பிக்கையுள்ளவர்களாக மாற்ற விரும்புகிறோம். பிரதமர் மோடி பெயரில் உத்தரவாதம் அளிக்கிறோம்.
மேலும், நாங்கள் ஒருபோதும் ஊழலைச் செய்யவில்லை, 15 ஆண்டுகளில் (பா.ஜ.க அரசின்), 30,000 கோடி ரூபாய்க்கும் குறைவான கடனில் உள்கட்டமைப்பைக் கட்டியுள்ளோம். அதே நேரத்தில் காங்கிரஸ் அரசாங்கம் 55,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து எதுவும் செய்யவில்லை. நாங்கள் திட்டமிட்டு செயல்படுகிறோம். சத்தீஸ்கரை கடனில் மூழ்கடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.