”காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, வாக்கு வங்கி அரசியலுக்காக தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் இருந்து திருடி "முஸ்லீம் சமூகத்திற்கு" தனி ஒதுக்கீடு கொடுக்க விரும்பின. எனினும், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Congress tried to give reservation to Muslims by reducing SC/ST quota: Modi
ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூர் தொகுதியில் நடைபெற்ற பா.ஜ.க பேரணியில் கலந்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய மோடி, "நாட்டை வலிமையான நிலைக்கு கொண்டு வந்தது யார்?... இதுதான் உங்கள் அன்பும் ஆசீர்வாதமும், நீங்கள் அனைவரும் மோடிக்கு பெருமை சேர்க்கிறீர்கள். ஆனால் எது நடந்தாலும் அது உங்களால் தான். 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டதற்கு நீங்கள்தான் காரணம்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டிருப்பார்கள்... ஒரே பதவி, ஒரே பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்காது... தொடர் குண்டுவெடிப்புகளால் அப்பாவி மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டிருப்பார்கள். கோவிட் காலத்தில் மக்களுக்கு இலவச ரேஷன் கிடைத்திருக்காது, அல்லது இலவச தடுப்பூசிகளும் கிடைத்திருக்காது.
கடந்த பத்து ஆண்டுகளில் நிலையான மற்றும் நேர்மையான அரசாங்கம் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்ய முடியும் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். 2014ல், மோடிக்கு சேவை செய்ய நீங்கள் வாய்ப்பளித்த போது, யாரும் நினைத்துக்கூட பார்க்காத முடிவுகளை நாடு எடுத்தது.
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எப்போதுமே திருப்திப்படுத்தல் மற்றும் வாக்கு வங்கி அரசியலாகும். 2004ல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, அவர்கள் செய்த முதல் காரியங்களில் ஒன்று, ஆந்திராவில் எஸ்.சி/எஸ்.டி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்தது. காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் செயல்படுத்த விரும்பிய முன்னோடித் திட்டம் இது. 2004 மற்றும் 2010 க்கு இடையில், அவர்கள் நான்கு முறை முஸ்லீம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முயன்றனர், ஆனால் சட்ட தடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கை காரணமாக முடியவில்லை.
காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பு மற்றும் பி.ஆர். அம்பேத்கர் பற்றி கவலைப்படாமல், நாட்டில் இதை [முஸ்லீம் ஒதுக்கீட்டை] கொண்டு வர விரும்புகிறது
வாக்கு வங்கி அரசியலுக்காக மற்றவர்களுக்கு எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓ.பி.சி உரிமைகளை வழங்குவது இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தெரிந்தும் காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் அவர்கள் அரசியலமைப்பைப் பற்றி கவலைப்படவில்லை.
உண்மை என்னவெனில், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, வாக்கு வங்கி அரசியலுக்காக, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் இருந்து திருடி, "சிறப்பு சமூகத்திற்கு" தனி ஒதுக்கீடு கொடுக்க விரும்பினர். இருப்பினும், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.” இவ்வாறு மோடி பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“