கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (மே 13) எண்ணப்பட்டது. ஆளும் பா.ஜ.க அரசை வீழ்த்தி காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் மெகா வெற்று பெற்றது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் 136 இடங்களை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க 65 இடங்களை கைப்பற்றி உள்ளது. முன்பு கிங் மேக்கராக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியாக புலிகேசி உள்ளது. இங்கு அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. ஓ.பி.எஸ் வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கூட்டணிக் கட்சியான பா.ஜ.க கேட்டுக்கொண்டதன் பேரில் அதிமுக தனது வேட்பாளர் அன்பரசனை திரும்பப்பெற்றது. பா.ஜ.க சார்பில் முரளி போட்டியிட்டார்.
இந்தநிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீனிவாசா சுமார் 62 ஆயிரத்து133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். ஸ்ரீனிவாசா மொத்தம் 87 ஆயிரத்து 214 வாக்குகள் பெற்றார். இரண்டாவது இடத்தில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தி 25 ஆயிரத்து 81 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் முரளி வெறும் 10 ஆயிரத்து 585 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“