கட்சிக்குள் விமர்சகர்களைத் தாக்கி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை காலை புதுதில்லியில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில், "முழுநேர கட்சித் தலைவர்" நான் தான் என்று வெளிப்படையாகப் பேசினார்.
கட்சிக்கு நல்ல செயல்படும் தலைவர் தேவை என்று சில G-23 தலைவர்களின் கருத்துக்களுக்கு வெளிப்படையாகப் பதிலளித்த சோனியா, "நீங்கள் என்னை அப்படிச் சொல்ல அனுமதித்தால், நான் தான் முழுநேர காங்கிரஸ் தலைவர்" என்று கூறினார்.
"கடந்த இரண்டு ஆண்டுகளில், எங்கள் சகாக்கள், குறிப்பாக இளையவர்கள், கட்சி கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் முன்னிலையில் இருந்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டம், தொற்றுநோயின் போது நிவாரணம் வழங்குதல், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீதான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துதல், தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மீதான கொடுமைகள், விலைவாசி உயர்வு மற்றும் பொதுத் துறையின் அழிவு, ஆகிய பிரச்சனைகளில் கவனம் செலுத்தியுள்ளனர்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா தனது தொடக்க உரையின் போது கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பொது முக்கியத்துவம் மற்றும் அக்கறை உள்ள பிரச்சினைகளை நாங்கள் ஒருபோதும் கவனிக்காமல் விடவில்லை. மன்மோகன் சிங் மற்றும் ராகுல் ஆகியோரைப் போலவே நானும் அந்த பிரச்சனைகளை பிரதமரிடம் எடுத்துச் சென்றேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். நாம் தேசிய பிரச்சினைகள் குறித்து கூட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம், நாடாளுமன்றத்திலும் நமது வியூகங்களை ஒருங்கிணைத்துள்ளோம் என்றார்.
“நான் எப்போதும் வெளிப்படையாக பேசுவதை பாராட்டியுள்ளேன். ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை. எனவே நாம் அனைவரும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விவாதிப்போம். ஆனால் இந்த அறையின் நான்கு சுவர்களுக்கு வெளியே தெரிய வேண்டியது காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டு முடிவு என்று சோனியா கூறினார்.
ஜி 23 தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பின் போது "எங்கள் கட்சியில், தற்போது தலைவர் இல்லை, எனவே இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரியும், ஆனால் இன்னும் எங்களுக்குத் தெரியாது." என்று கூறினார்.
ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கட்சி தேர்தல் பற்றி குறிப்பிடுகையில், “முழு அமைப்பும் காங்கிரஸின் மறுமலர்ச்சியை விரும்புகிறது. ஆனால் இதற்கு ஒற்றுமை மற்றும் கட்சியின் நலன்களை முதன்மையாக வைத்திருப்பது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கு சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை." என்று சோனியா காந்தி கூறினார்.
மேலும், "காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து நான் இடைக்கால காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன் என்பதை உணர்கிறேன், 2019 ல் இந்த பொறுப்பிற்கு திரும்ப வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். அதன் பிறகு 2021 ஜூன் 30 அன்று ஒரு வழக்கமான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வரைபடத்தை நாங்கள் இறுதி செய்தோம். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டை முறியடித்தது மற்றும் இந்த காலக்கெடு மே 10, 2021 அன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது. இன்று மீண்டும் ஒருமுறை தெளிவைக் கொண்டுவருவதற்கான சந்தர்ப்பம் இது. முழு அளவிலான கட்சி தேர்தல்களுக்கான அட்டவணை உங்கள் முன் உள்ளது என்றும் சோனியா காந்தி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.