Sreenivas Janyala
ஆந்திராவின் தலைநகராக உருவாக்கப்பட்டு வரும் அமராவதி நகரில் அனைத்து கட்டுமானப் பணிகளையும், ஆந்திராவின் பல இடங்களில் நடந்து வந்த கட்டுமான பணிகளையும் நிறுத்து வைத்து உத்தரவிட்டுள்ளது புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி அரசு. அமைச்சர்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு, எம்.எல்.ஏ.க்களுக்கு மற்றும் நீதிபதிகளுக்கு என அமரவாதி நகரில் கட்டப்பட்டு வந்த அபார்ட்மென்ட்டுகள் மற்றும் பங்களாக்களின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மணல் தட்டுப்பட்டால், மாநிலம் முழுவதும் நடைபெற்றுவந்த அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் போட்ஸா சத்யநாராயணன் கூறுகையில், "முந்தைய தெலுங்கு தேச ஆட்சியின் போது, கொடுக்கப்பட்ட சில ஒப்பந்தங்களை அரசு மறுபரிலீசனை செய்கிறது. அதிக தொகைக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதால், அரசு கருவூலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது குறித்த விசாரணை முடியும் வரை, பணப் பரிவர்த்தணை நிறுத்தி வைக்கப்படுகிறது. 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்த கட்டிடங்களில் மீதமுள்ள பணியைத் தொடரலாம். ஆனால், நிதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது" என்றார்.
மேலும், "தெலுங்கு தேசம் கட்சியின் மணல் சுரங்கம் மற்றும் விநியோகக் கொள்கைகளை அரசு ரத்து செய்கிறது. அவை, பரவலாக சட்ட விரோத சுரங்கப் பணிகளை ஊக்குவிப்பதாக அமைந்து அதிக விலைக்கு மணல் விற்கப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்ந்த உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் தான் இதனால் பலன் பெறுகின்றனர். நாங்கள் விரைவில் புதிய மற்றும் வெளிப்படையான கொள்கையை கொண்டு வருவோம். புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை, மணலை பாதுகாப்பது குறித்தும், வழங்குவதும் குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது" என்றும் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1611-300x217.jpg)
அரசு இப்போது கட்டுமானப் பணிகளுக்கு நிதியை நிறுத்தி வைத்தாலும், கடந்த ஜூலை மாத கடைசி வாரத்திலேயே அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதுகுறித்து அமரவாதியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமராவதியில், 70 - 75 சதவிகித பணிகள் நிறைவடைந்த கட்டிடங்களில் கூட, முந்தைய காலாண்டில் வர வேண்டிய நிதி நிறுத்தப்பட்டதால் பணிகளை தொடர முடியவில்லை. அரசு மாறிய பிறகும் கூட, எங்களுக்கு நிதி வரவில்லை" என்றார்.
அமரவாதியில் நடைபெற்று வந்த பணிகளுக்காக ஜார்க்கண்ட், ஓடிஸா, சட்டீஸ்கர், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து 50,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் பாதிக்கு பாதி தொழிலாளர்களை, பணியில்லை என்று சொல்லி ஒப்பந்ததாரர்கள் நீக்கியுள்ளனர். ஆந்திர பிரதேச தலைநகர் மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், "தேர்தலுக்கு முன்பாக, 9,800 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட புதிய ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விஜயவாடா - அமராவதியை இணைக்கும் பாலம், குடிநீர்த திட்டம், வைகுண்டபுரம் தடுப்பணை, ரிங் சாலைகள், பூங்கா மற்றும் பொழுதுபோக்கு இடங்களை உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் மற்றும் விசாகப்பட்டினத்தின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வுமான பி விஷ்ணு குமார் ராஜு கூறுகையில், "விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் அதிக அளவிலான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பொது மற்றும் தனியார் கூட்டு மற்றும் தனியார் அமைப்பிலும் மணல் கொள்முதலில் சிரமம் ஏற்பட்டிருப்பதால், பணிகள் தொய்வடைந்துள்ளன, பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அமராவதி இப்போது பேய் நகரம் போல காட்சி அளிக்கிறது" என்றார்.
சுரங்க அமைச்சர் பி ராமச்சந்திரா ரெட்டி கூறுகையில், "விரைவில் புதிய மணல் கொள்கை வெளியிடப்படும். மிகவும் வெளிப்படைத்தன்மையான வரைவு அறிக்கை தயாராக உள்ளது. ஆந்திர பிரதேச கனிமவள மேம்பாட்டுக் கழகம்(APMDC), இந்த புதிய கொள்கையை அமல்படுத்தும். ஆற்று மணல் சுரண்டப்படுவதைத் தடுக்க, தயாரிக்கப்பட்ட மணலையும் ஊக்குவிக்கிறோம். வாடிக்கையாளர்கள் மணலை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால், அவர்கள் இருக்குமிடத்திற்கு மணல் விநியோகிக்கப்படும். APMDC மணல் விலையைக் கட்டுப்படுத்தும்" என்றார்.