புதுதில்லியில், சில நாட்களுக்கு முன்பு தப்லிக்- ஈ- ஜமாஅத் தலைமையிடமான நிஜாமுதீன் மார்க்ஸ் என்ற மசூதியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் அனைவரையும் அடையாளம் காண, தனிமைப்படுத்த, பரிசோதிக்க இருபதுக்கும் அதிகமான மாநில அரசு நிர்வாகமும், ஒரு யூனியன் பிரேதேச நிர்வாகமும் கவனம் செலுத்திவருகிறது.
இந்த நிஜாமுதீன் மார்க்ஸ் நிகழ்வு பல்வேறு மாநிலங்களில் தாக்கத்தை காண்பித்து வருகின்றது. உதாரணமாக, தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 57 பேர்களில், 50 பேர் இந்த டெல்லி நிகழ்வோடு தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் முன்னதாக, தெலுங்கானா மாநிலத்தில் மரணமடைந்த ஐந்து கொரோனா நோயாளிகள், இந்த டெல்லி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது .
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த மாநாட்டில் மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதனால், கலந்து கொண்ட அனைவரின் தொடர்பு தடமறியும் செயல்முறை (Contact tracing) சுகாதார அதிகாரிகளுக்கு சிக்கலாய் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் வாழும் 1,548 பேரை டெல்லி அரசு பல்வேறு மருத்துவமனைகளிலும், தடுப்பு மையங்களிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இப்பகுதியில் ஊரடங்கு கடுமையான முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 711 பேரை அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அண்டை மாநிலமான தெலுங்கானாவில் குறைந்தபட்சம் 400 பேர் கூட்டத்தில் பங்கேற்றதாக கண்டறியப்பட்டுள்ளது. கரீம்நகர் குழு தங்கள் மாநிலத்திற்கு திரும்பும் போது,10 இந்தோனேசியர்களை கையோடு அழைத்து வந்திருக்கின்றனர்.
ரயிலின் ஸ்லீப்பர் கோச் மூலமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட இவர்கள், மார்ச் 13-ம் தேதி பெடபள்ளி மாவட்டத்தில் ராமகுண்டம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். அங்கிருந்து ஆட்டோரிக்ஷாவில் போகும் வழியில் வழிபாட்டுத் தளங்களுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள், கரீம்நகரில் உள்ள நான்கு வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்ற இவர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். வருகை புரிந்த 10 இந்தோனேசிய மக்களில் ஒருவருக்கு கடந்த மார்ச் 17ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த நாள் மீதமுள்ள ஒன்பது பேருக்கும் உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், அடையாளம் காணப்பட்ட 711 பேரையும் ஆந்திர மாநில அரசு தனிமைப்படுத்தியுள்ளது. 122 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 207 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 297 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 87 பேரை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று அமைச்சர் பெர்னி வெங்கடராமையா தெரிவித்துள்ளார். மாநாட்டிற்கு வேறு யாராவது பயணம் செய்துள்ளர்களா? என்ற தகவலையும் நாங்கள் சேகரித்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
டெல்லி மாநாட்டில், தமிழகத்தில் இருந்து 1,131 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. மாநில தலைமைச் செயலாளர் கே. சண்முகம் கூறுகையில்," 1,131 பேரில் 515 பேரை மட்டுமே அடையாளம் கண்டுள்ளோம். மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும். பலரின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப்ல் உள்ளது. முகவரிகளும் தவறாக உள்ளது. உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம். 400க்கும் அதிகமான மக்கள் இன்னும் டெல்லியில் சிக்கித் தவிக்கின்றனர்.” என்று தெரிவித்தார்.
மார்ச் 27 அன்று கர்நாடக தும்கூரி நகரின் மரணமடைந்த 60 வயது முதியவர் நிஜாமுதீன் மார்க்ஸ் நிகழ்வோடு தொடர்புடையவர் என்று அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, 50 வெளிநாட்டினர் உட்பட 78 பேரை கர்நாடகா அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது. அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில்" தனிமைப்படுத்தப்பட்ட 78 பேரும் டெல்லி நிஜாமுதீன் மார்க்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டார்களா ? என்பதை நாங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால், இவர்கள் அனைவரும் தப்லிக்- ஈ - ஜமாஅத்- ஐ சேர்ந்தவர்கள்" என்றார்.
கர்நாடக காவல்துறை இதுகுறித்து கூறுகையில்," டெல்லியில் மார்ச் 8 முதல் மார்ச் 11 வரை நடந்த இந்த நிகழ்வில் ஜமாஅத் அமைப்போடு தொடர்புடைய 300 பேர் கர்நாடாகாவில் இருந்து கலந்திருக்கலாம், அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கின்றனர்.
கேரளாவில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 59 பேர் கலந்து கொண்டதாகவும், தனிமைபடுத்தும் செயல்முறைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லிஅருகில் இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில், 19 மாவட்டங்களைச் சேர்ந்த 157 பேர் சபையில் நிஜாமுதீன் மார்க்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 157 பேரின் இல்லத்தையும் சோதனை செய்தது உ.பி காவல்துறை, இதுவரை ஒன்பது பேர் மட்டுமே தங்கள் இல்லத்திற்கு திரும்பியதை கண்டறிந்தது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட எட்டு இந்தோனேசிய பிரஜைகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பிஜ்னோர் வழிப்பாட்டுத் தள உறுப்பினர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. உத்தர பிரேதேசம் பிஜ்னோருக்கு வருவதற்கு முன்பு, அவர்கள் ஒடிசா சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்பு தடமறிதலைக் கண்டறிய ஒடிசாவில் அவர்களின் பயண விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அசாம் , உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகமான மக்கள் இந்த நிஜாமுதீன் மார்க்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பாமல், தலைநகர் டெல்லியில் தங்கியுள்ளனர். இதனால், அசாம், உத்தரகாண்ட் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், " 456 அசாமிய மக்கள் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது, பெரும்பாலனவர்கள் தேல்ஹயி தான் உள்ளனர். மேலும், அங்கிருந்து திரும்பி வந்த எவரையும் அரசாங்கம் தனிமைப்படுத்தும்" என்று தெரிவித்தார்.
மேற்கு வாங்க மாநிலத்தில் 73 பேர் கலந்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிகின்றது. "அடையாளம் காணும் செயல்முறை நடந்து வருகிறது, கலந்து கொண்டவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்" என்று ஒரு அதிகாரி கூறினார்.
நிஜாமுதீன் மார்க்ஸ் நிகழ்வுக்குச் சென்ற நபர்களின் எண்ணிக்கையை ஜார்க்கண்ட் மாநிலம் இன்னும் கண்டுபிடிக்க முயன்று வரும் நிலையில், பீகார் கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அமீர் சுபானி," இதுவரை எங்களிடம் எந்த டேட்டாவும் இல்லை" என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், மார்ச் மாதத்தில் டெல்லி மார்க்கஸுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை துல்லியமாக எங்களிடம் இல்லை" என்று தெரிவித்தார். எவ்வாராயினும் , பெயர் குறிப்பிட விரும்பாத தப்லிக்- ஈ - ஜமாஅத் உறுப்பினர் ஒருவர்,"மாநிலத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருக்கலாம்.” என தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் டெல்லி மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக இறங்கியுள்ளது.
800 நபர்கள் கொண்ட பட்டியலை ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் தயாரித்துள்ளது. அதில் டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்களின் பெயர்களும் அடங்கும். இதில்,350 க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.