துணை ஜனாதிபதி தேர்தலிலும் களத்தில் குதிக்க முடிவெடுத்துவிட்ட எதிர்கட்சிகள் ஜூலை 11-ம் டெல்லியில் கூடி வேட்பாளரை தேர்வு செய்ய இருக்கின்றன.
ஜனாதிபதி பதவிக்கான தேர்தலே நிறைவுபெறாத சூழலில், துணை ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராக வேண்டியிருக்கிறது. காரணம், அடுத்தடுத்து இருமுறை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவரான ஹமீது அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஆகஸ்ட் 5-ம் தேதி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் ஜூலை 4-ம் தேதி தொடங்கியது. ஜூலை 18-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் தங்களையும் ஆலோசித்து ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளரை முடிவு செய்யும் என காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்பார்த்தார். ஆனால் பெயரளவுக்கு சோனியாவுடனும் இடதுசாரிகளுடனும் ஆலோசனை நடத்திவிட்டு, ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் வளர்ந்த ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க.! தலித் சமூகத்தை சேர்ந்தவரான அவரை எதிர்கொள்ள எதிர்கட்சிகளும் வேறு வழியின்றி அதே சமூகத்தை சேர்ந்தவரான மீராகுமாரை களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.
எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் தேர்வில் முந்திக்கொள்ள விரும்புகிறார் சோனியா. இதற்காக ஜூலை 11-ம் தேதி டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தவிருக்கிறார் அவர். ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாரை ஆதரிக்கும் இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தி.மு.க. உள்ளிட்ட 17 கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் எனத் தெரிகிறது.
ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்களின் ஆதரவைப் பெற்றால் துணை ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டியை கொடுக்க முடியும் என காங்கிரஸ் கருதுகிறது. ஆனால் புதிதாக எந்தக் கட்சியும் காங்கிரஸ் முகாமுக்கு வருவதாகத் தெரியவில்லை. எனவே தோற்றாலும் போராடி தோற்கும் முடிவுக்கு எதிர்கட்சிகள் வந்திருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளர் பரிசீலனையில் இருந்தவர்களான மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ணன் காந்தி அல்லது பிரகாஷ் அம்பேத்கர் ஆகிய இருவரின் ஒருவரை வேட்பாளராக நிறுத்த சோனியா ஆலோசிப்பதாக கூறுகிறார்கள். பா.ஜ.க.வின் பரிசீலனைப் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், வெங்கைய நாயுடு ஆகியோரின் பெயர்களும் இருப்பதாக தெரிகிறது.
தேர்வு முறை: ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவை எம்.பி.க்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்களும் வாக்களிப்பார்கள். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவை எம்.பி.க்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. வேட்பாளரை தலா 20 எம்.பி.க்கள் முன்மொழிந்து, வழி மொழியவும் வேண்டும். போட்டி உறுதியானால், ஆகஸ்ட் 5-ம் தேதி ரகசிய ஓட்டுசீட்டு முறைப்படி தேர்தல் நடக்கும். இதற்கென வழங்கப்படும் பிரத்யேக பேனா மூலமாக மட்டுமே ‘டிக்’ செய்து எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள்.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 790. இவர்களின் 500-க்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு பா.ஜ.க. வேட்பாளருக்கு கிடைக்கும் சூழல் உள்ளதால், பிரதமர் மோடியின் வேட்பாளருக்கு வெற்றி உறுதிதான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.