Advertisment

முரண்பாடான அரசு விதிகள்: மத்திய பல்கலை. காலியாக இருக்கும் இ.டபிள்யூ.எஸ் ஆசிரியர் பணியிடங்கள்

அரசு நிர்ணயித்த இரண்டு தகுதி அளவுகோல்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக, மத்திய பல்கலைக்கழகங்களில் இ.டபிள்யூ.எஸ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

author-image
WebDesk
New Update
Contradictory govt rules senior EWS faculty positions vacant in central universities in tamil

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவில் இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியரை நியமிக்க முடியாத 28 மத்தியப் பல்கலைக்கழகங்களையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது.

central-government: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு (Economically Weaker Section - EWS) 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு நிறைவேற்றியது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஒதுக்கீட்டின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்களில் இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் மத்திய அரசு நிர்ணயித்த இரண்டு தகுதி அளவுகோல்களுக்கு இடையிலான முரண்பாட்டின் காரணமாக காலியாக உள்ளன என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆர்.டி.ஐ கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ளது. 

Advertisment

ஜூலை 1, 2023 நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு ஆசிரியர் பணியிடங்களைக் கொண்ட 35 மத்தியப் பல்கலைக்கழகங்களில், டெல்லி பல்கலைக்கழகம், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்கள் உட்பட 31 பல்கலைக்கழகங்களில் ஒரு இடத்தைக் கூட நிரப்பத் தவறிவிட்டன. சுமார் 380 ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Contradictory govt rules keep senior EWS faculty positions vacant in central universities

இது மத்திய பல்கலைக்கழகங்களின் முயற்சியின் குறைவால் அல்ல என்றும், அவர்கள் சமீப காலங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பல ஆட்சேர்ப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. 

உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான தகுதி அளவுகோல்களுக்கும், பணியாளர் பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் (DoPT) வகுத்துள்ள மத்திய அரசுப் பணிகளில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு இட ஒதுக்கீட்டுத் தகுதிக்கான நிபந்தனைகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டின் விளைவாக காலியிடங்கள் உருவாகியுள்ளன. 

பணியாளர் பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சக வழிகாட்டுதல்களின்படி, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவில் இந்திய அரசாங்கத்தின் கீழ் ஒரு பதவிக்கு விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்க வேண்டும். இதே உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களின் படி, இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் நிலைகளில் நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதி பெற, விண்ணப்பிக்கும் ஒருவர் குறைந்தது எட்டு ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், எட்டு வருட அனுபவமுள்ள உதவிப் பேராசிரியரின் ஊதியம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்தைத் தாண்டுகிறது. இந்த முரண்பாடு அனைவரையும் இணைப் பேராசிரியர் அல்லது பேராசிரியராக ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகுதியற்றதாக ஆக்குகிறது.

இருப்பினும், கல்வித்துறையில் நுழைவு நிலைப் பதவியான உதவிப் பேராசிரியர் மட்டத்தில் ஆட்சேர்ப்பை இது பாதிக்காது. தொடக்க நிலை பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது மிகவும் சாத்தியம்.

ஆனால் நுழைவு அல்லது உதவி பேராசிரியர் மட்டத்தில் கூட, 35 மத்திய பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளில், ஒவ்வொரு மூன்று அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஒன்று அல்லது 64.4% காலியாக உள்ளது. இதனை ஒப்பிடுகையில், அனைத்து 46 மத்திய பல்கலைக்கழகங்களிலும், பொதுப் பிரிவில், 893 அல்லது 14% பணியிடங்கள் காலியாக உள்ளன, எஸ்.சி பிரிவில் 266 அல்லது 20%,  எஸ்.டி பிரிவில் 161 அல்லது 23% மற்றும் ஓ.பி.சி பிரிவில் 681 அல்லது 29% பணியிண்டங்கள் காலியாக உள்ளன.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவில் இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியரை நியமிக்க முடியாத 28 மத்தியப் பல்கலைக்கழகங்களையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. இதில் 13 பல்கலைக்கழகங்கள் முரண்பாட்டால் அத்தகைய பதவிகளை நிரப்ப இயலாது என்று ஒப்புக்கொண்டனர். சில பல்கலைக்கழகங்கள் இந்த பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சிடம் தெரிவித்து இருப்பதாக தெரிவித்தனர்

டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங்கை தொடர்பு கொண்டபோது, ​​“பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ், குடும்பத்தின் மொத்த வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் இணைப் பேராசிரியராகும்போது, ​​வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். இந்திய அரசும் இந்தப் பிரச்சினையைப் பற்றி யோசித்து வருவதாக நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் இதில் ஒரு திருத்தம் வரக்கூடும் என்று நம்புகிறேன். ஆனால் இதற்கிடையில், இந்த ஒதுக்கீட்டின் கீழ் நியமனங்கள் சாத்தியமில்லை." என்று கூறினார். 

டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் 26 பேராசிரியர் பணியிடங்களும், இணை பேராசிரியர் மட்டத்தில் 64 பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு பணியிடங்களும் உள்ளன. அனைத்தும் காலியாகவே உள்ளன.

மற்றொரு புகழ்பெற்ற பல்கலைக்கழகமான அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு  ஒதுக்கீட்டின் கீழ் 27 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவரான பேராசிரியர் தனஞ்சய் யாதவ் இந்த இதழிடம் பேசுகையில், "பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு நெறிமுறைகளுக்கு இடையேயான முரண்பாடு பிந்தையவர்கள் வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் “பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானபோதும் நாங்கள் கேள்விகளை அனுப்பினோம். மொத்த குடும்ப வருமானம் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவில் கணக்கிடப்படுகிறது. 8 லட்சத்திற்கும் குறைவான அல்லது அதற்கு சமமான வருமானம் கொண்ட ஒரு விண்ணப்பதாரரை எவ்வாறு கண்டுபிடிப்பது? என்று அவர் கேள்வி எழுப்பினார். 

அலகாபாத் பல்கலைக்கழகம் கடைசியாக 2021 செப்டம்பரில் உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் ஆகிய ஆசிரியர் பதவிகளுக்கு பணியமர்த்துவதற்கான அழைப்பை வெளியிட்டது.

ஆட்சேர்ப்பு சுழற்சி ஜூன் 2023 இல் முடிவடைந்தது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவின் கீழ் இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகளுக்கு தகுதியான எந்த விண்ணப்பதாரரையும் பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. "ஒவ்வொரு மத்திய பல்கலைக்கழகமும் ஒரே பிரச்சனையால் அவதிப்படுகின்றன" என்று பேராசிரியர் தனஞ்சய் யாதவ் வலியுறுத்தினார். 

35 மத்தியப் பல்கலைக்கழகங்களில், நான்கு பல்கலைக்கழகங்களான சத்தீஸ்கர் குரு காசிதாஸ் விஸ்வவித்யாலயா (GGV), மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஸ்வவித்யாலயா மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) - சில பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு ஆசிரியப் பதவிகளை இணை மற்றும் நிபுணத்துவ நிலைகளில் நிரப்ப முடிந்தது. குரு காசிதாஸ் விஸ்வவித்யாலயா இட ஒதுக்கீட்டின் கீழ் மூன்று இணைப் பேராசிரியர்களை நியமித்துள்ள நிலையில், மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் மகாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வவித்யாலயா ஆகியவை ஒரே நிலையில் தலா ஒருவரை நியமித்துள்ளன. பனாரஸ் இந்து பல்கலைக்கழக இருவரைப் பணியமர்த்தியுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு இட ஒதுக்கீட்டின் கீழ் பேராசிரியர் பதவிக்கு சத்தீஸ்கர் குரு காசிதாஸ் விஸ்வவித்யாலயா மூன்று விண்ணப்பதாரர்களை நியமித்துள்ளார் என்பதையும் தரவு காட்டுகிறது. குரு காசிதாஸ் விஸ்வவித்யாலயா மற்றும் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு நெறிமுறைகளில் முரண்பட்ட போதிலும் விண்ணப்பதாரர்களை எவ்வாறு பணியமர்த்த முடிந்தது என்பது குறித்த கேள்விக்கு இரு பல்கலைக்கழகங்களும் பதிலளிக்கவில்லை.

பெயர் வெளியிட விரும்பாத  பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் பேசுகையில், பல்கலைக்கழகம் இணைப் பேராசிரியர் மட்டத்தில் தகுதியான இரண்டு விண்ணப்பதாரர்களைக் கண்டறிந்தது. ஏனெனில் அவர்கள் முந்தைய வேலையில் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர் மற்றும் அவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவு வருமான அளவுகோலைச் சந்தித்தனர்.

இணை பேராசிரியராக நியமிக்க, ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் ஆசிரியர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த அனுபவம் எந்த வடிவத்திலும் இருக்கலாம். அது முழுநேர ஒப்பந்த அடிப்படையில் இருக்கலாம். இந்தப் பணியிடங்களின் கீழ் குறைந்த வருமானம் பெறும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு விண்ணப்பதாரர்களின் நியமனத்தில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் விதிகளையும் பின்பற்றியுள்ளது,” என்று அந்த அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Central Government Economically Weaker Section
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment