2019 ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31க்கு இடையே காங்கிரஸ் கட்சிக்கு சுமார் ரூ .20 கோடியை தேர்தல் நன்கொடையாக ஐடிசி லிமிடெட் வழங்கியுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த 2019-20 ஆண்டுக்கான தேர்தல் நிதி பங்களிப்பு அறிக்கையில், ஐ.டி.சி நிறுவனம் 13 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக சுட்டிக்காட்டியது. அதன் துணை நிறுவனங்களான ஐடிசி இன்ஃபோடெக் லிமிடெட் மற்றும் ரஸ்ஸல் கிரெடிட் லிமிடெட் முறையே ரூ .4 கோடி மற்றும் ரூ .1.4 கோடியை நன்கொடையாக வழங்கியது.
இருப்பினும்,தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் தான் காங்கிரஸ் கட்சிக்கு அநேக நன்கொடைகள் கிடைக்கிறது. விவேகம் தேர்தல் அறக்கட்டளை (பாரதி ஏர்டெல் குழு, டி.எல்.எஃப் நிறுவனங்கள் நிர்வகிக்கும்) மற்றும் ஜன்கல்யாண் தேர்தல் அறக்கட்டளை ஆகியவை சுமார் 30 கோடி ரூபாய் மற்றும் 25 கோடி ரூபாய் பங்களித்தன.
அரசியல் கட்சிகள் தனிநபர், தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதிகளைப் பெறுகின்றன. நன்கொடையாளர்கள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை கொடுக்கப்பட்டது? என்ற தகவலை பாதுக்ககும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தேர்தல் அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டன. இதன்மூலம், நன்கொடையாளர்கள் தங்கள் நிதியை தேர்தல் அறக்கட்டளைகளுக்கு கொடுக்கத் தொடங்கினர். அறக் கட்டளைகள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இந்த நிதியை பிரித்து கொடுக்கின்றன.
2018-19 ஆம் ஆண்டில் ஐடிசி மற்றும் ஐடிசி இன்ஃபோடெக் நிறுவனம் பாஜகவுக்கு ரூ .23 கோடியை தேர்தல் நன்கொடையாக அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் நன்கொடை அறிக்கையில், ரூ .20,000 க்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்களை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும். அதன்படி, காங்கிரஸ் ரூ .139 கோடியை நன்கொடையாக பெற்றதாக அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்களுடைய வரவு செலவு கணக்கை வருமான வரித்துறை ஆணையத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்க வேண்டியது அவசியம். நன்கொடையாளரின் பெயர், முகவரி, பான் எண், பணம் செலுத்தும் முறை மற்றும் நன்கொடை தேதி பற்றிய விவரங்கள் அதில் தெரிய வரும்.
தேசிய வாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் 2019-20க்கான நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் பொது தளத்தில் பகிர்ந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி வழக்கம் போல் ரூ. 20,000 க்கு மேல் நன்கொடையாக பெற எண்ணிக்கை பூஜ்யம் என அறிவித்தது. தேசியவாத காங்கிரஸ் ரூ .60 கோடிக்கான விவரங்களை அளித்துள்ளது.
பாஜக, திருணாமுல் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் நிதி அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களின் மிகப்பெரிய பயனாளியாக பாஜக உள்ளது. ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்.) வெளியிட்டுள்ள அறிக்கைப்படி," 2018-19ல் இந்தியாவின் ஐந்து தேசிய கட்சிகள் முக்கிய பெருநிறுவனங்களிடம் இருந்து ரூ .876.10 கோடியை நன்கொடையாக பெற்றது. இதில், ரூ .698 கோடி என்ற அதிகப்படியான பங்கு ஆளும் பாஜகவுக்கு சென்றது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் நன்கொடையாளர்களின் பட்டியலில் இருந்து பெரு நிறுவனங்கள் வெளியேறி வருகிறது.
கட்சியில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், ரூ .3 கோடி ரொக்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.