Non-Hindus Employees at Tirupati: அண்மையில் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் ஆந்திரப் பிரதேச அரசுப் பேருந்து பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலம் புனிதப் பயணம் விளம்பரம் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், திருமலை திருப்பதி கோயிலில் வேலை செய்யும் இந்துக்கள் அல்லாதவர்கள் விவகாரம் மீண்டும் மற்றொரு சர்ச்சையாக எழுந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளர் எல்.வி.சுப்ரமணியம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரியை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செய்தியாளர் சுப்ரமணியம், “இங்கு பணிபுரியும்போது அவர்கள் மதம் மாறிவிட்டால் நல்லது. அவர்கள் மதம் மாறுவதற்கு சுதந்திரமாக உள்ளனர். யாரும் அவர்கள் மதம் மாறுவதை எதிர்க்க மாட்டார்கள். இருப்பினும், அவர்கள் பணியைத் தொடர முடியாது. மேலும் அவர்களுக்கு முக்கியமான பதவி வழங்கப்படாது. ஏனென்றால், அது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும். மேலும், அவர்கள் வீட்டிலேயே தங்கள் மத நம்பிக்கையைக் கடைபிடிக்கலாம். ஆனால், அவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை விட்டு வெளியேற வேண்டும். தேவைப்பட்டால், திருமலையில் பணிபுரிபவர்களின் குடியிருப்புகளில் கூட நாங்கள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வோம்” என்று கூறினார்.
ஏற்கெனவே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், இந்துக்கள் அல்லாதவர்களின் அடையாளம் காண்பதற்கான நடவடிக்கையை தொடங்கிவிட்டார்கள்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை புதிதல்ல, கடந்த ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை நிர்வாக அதிகாரி சினேக லதாவின் வீடியோ ஒன்று வெளியானது. அதில், அவர் திருமலை தேவாஸ்தான போர்டுக்கு சொந்தமான காரில் தேவாலயத்திற்கு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், திருமலையில் 44 பதவிகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இப்படி நியமனம் செய்யப்பட்ட இந்துக்கள் அல்லாதவர்கள் பெரும்பாலும், ஓட்டுநர், தோட்டவேலைக்காரர், சுகாதார பணியாளர், செவிலியர் உள்ளிட்ட பணிகளில்தான் நியமிக்கப்பட்டிருந்தனர். அங்கே பல ஆண்டுகளாக பணிபுரியும் இந்த ஊழியர்கள் அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பணி நியமனம் செய்யும்போது எங்கள் மதத்தை மறைக்கவில்லை. இது பாரபட்சமான நடவடிக்கை என்று வாதிட்டனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் இந்து மத நிறுவனங்களில் அறக்கட்டளைகளில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாத பணியாளர்கள் வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்ற அரசாணையை திருப்பதி தேவஸ்தானம் சுட்டிக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து, அந்த ஊழியர்கள் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசின் பணி நீக்க நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான பணியாளர்கள் கோயிலில் இந்து அல்லாத மத பழக்கங்களை கடைபிடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த தடை ஆணை இன்னும் அப்படியேதான் உள்ளது.
அண்மையில் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் ஆந்திரப் பிரதேச அரசுப் பேருந்து பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலம் புனிதப் பயணம் விளம்பரம் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. இந்நிலையில், ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளர் எல்.வி.சுப்ரமணியம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.