Conversation with Trump, Modi targets Imran: ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இன்று தொலைபேசி வழியாக உரையாடல் நடத்தியுள்ளார். உரையாடலின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மறைமுகமாக குறிப்பிடும் வகையில், "சில தலைவர்கள் இந்தியாவை எதிர்க்கும் வகையில், வன்முறையைத் தூண்டும் விதமாக தீவிரமான சொற்களைப் பயன்படுத்தி பேசுகின்றனர். அது பிராந்தியத்தில் அமைதிக்கு உகந்ததல்ல என்றும் பிரதமர் மோடி டொனால்ட் டிரப்ப்பிடம் கூறியுள்ளார்.
காஷ்மீர் தொடர்பாக புது டெல்லியுடனான பதட்டங்களைக் குறைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை டொனால்ட் டிரம்ப் இம்ரான் கானுடன் பேசி இரண்டு நாட்கள் கடந்த நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கத் தலைவர் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது, பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தவிர்ப்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். மேலும்,
வறுமை, கல்வியறிவின்மை மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் வழியைப் பின்பற்றும் எவருடனும் ஒத்துழைக்க இந்தியாவின் உறுதியாக இருக்கும் என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்களைப் பற்றி விவாதம் நடைபெற்றது. இரு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற 30 நிமிட உரையாடலில், இரு தலைவர்களுக்கிடையிலான உறவுகளை வகைப்படுத்தும் அரவணைப்பு மற்றும் நல்லுறவு பற்றி குறிப்பிடப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிபர் டிரம்புடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதைப் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் முன்வந்தார். ஜூலை மாதம் வாஷிங்டனில் இம்ரான் கானுடனான சந்திப்பின் போது, காஷ்மீர் பிரச்னை தொடர்பான பதட்டத்தைத் தீர்க்க மோடி அமெரிக்காவின் உதவியை நாடியதாக டிரம்ப் கூறியிருந்தார். இருப்பினும், அமெரிக்காவின் எந்தவொரு மத்தியஸ்தத்தையும் புது டெல்லி நிராகரித்தது.
ஆகஸ்ட் 5 ம் தேதி, அரசியலமைப்பின் 370 வது பிரிவை திருத்தி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலத்தை பிரித்தது.
இந்தியாவின் இந்த முடிவைத் தொடர்ந்து, புது டெல்லியுடனான இராஜதந்திர உறவுகளை குறைக்க முடிவு செய்த பாகிஸ்தான் இந்திய தூதரை விரைவாக வெளியேற்றியது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் அரசியலமைப்பின் 370 வது பிரிவை திருத்திய நடவடிக்கை ஒரு உள் விவகாரம் என்றும், யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இந்தியா சர்வதேச சமூகத்திடம் திட்டவட்டமாக கூறியுள்ளது.