Group Captain Varun Singh passed away : கடந்த 8ம் தேதி அன்று குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 13 நபர்கள் உயிரிழந்தனர். இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 நபர்கள் உயிரிழந்த நிலையில் க்ரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்தார். அவர் மேற்படி சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
கடந்த ஆண்டு தேஜஸ் இலகுரக விமானத்தை எந்த ஒரு சேதமும் இல்லாமல் பத்திரமாக தரையிறக்கியதற்காக அவருக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி அன்று சவுரிய சக்ரா விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. 39 வயதான வருண் சிங் ராணுவ குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தை இந்திய ராணுவத்ட்தில் கர்னலாக பணியாற்றினார். அவருடைய சகோதரர் தற்போது இந்திய கப்பற்படையில் பணியாற்றி வருகிறார். வருணிற்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவை ஒட்டி தலைவர்கள் தங்களின் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.
மோடி இரங்கல்
பெருமையுடன் நாட்டிற்காக பணியாற்றினார் குரூப் கேப்டன் வருண் சிங். அவரின் மரண செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவருடைய சேவையை இந்த நாடு என்றும் மறக்காது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் வெளியிட்டுள்ளார்.
நம்முடைய இதயத்தில் என்றும் வாழ்வார் வருண் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வருண் சிங்கின் வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். நம்முடைய இதயத்தில் அவர் என்றும் வாழ்வார் என்று தமிழக முதல்வர் தன்னுடைய இரங்கல் குறிப்பில் வருண் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil