ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் (12841) பல பெட்டிகள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) மற்றொரு பயணிகள் ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டன.
இந்த விபத்து குறித்து ரெயில்வே இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ஏராளமான பயணிகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், சிறப்பு நிவாரண ஆணையர் பாலாசோரில் உள்ள ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைக் குழுவைத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பாலசோர் கலெக்டரும் சம்பவ இடத்திற்கு வந்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில், ஒடிசா அரசு அவசர தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. அந்த எண்கள் 06782-262286 ஆகும்.
50 ஆம்புலன்ஸ்கள் வருகை
ரயில் விபத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்திற்கு சுமார் 50 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டதாக ஒடிசா சுகாதார செயலாளர் ஷாலினி பண்டிட் தெரிவித்தார்.
ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசாவில் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக ட்விட்டரில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விபத்து உதவி எண்கள்
விபத்து தொடர்பாக உதவி செய்ய டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரலில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் உதவி மையங்களின் ஹெல்ப்லைன் எண்கள்: 044-25330952, 044-25330953 & 044-25354771 ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“