Corona Updates: புதுச்சேரியில் மதுக்கடை திறப்பு திடீர் தள்ளிவைப்பு

Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

By: May 18, 2020, 10:50:21 PM

Covid-19 Cases Update : கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு, மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தளர்வு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகளுடன் தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் தற்போதுள்ள நிலையே தொடரும், என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்று இயங்கும் பேருந்துகளில், 20 பேர் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர பிற பகுதிகளில் சிறு நிறுவனங்கள், நூறு சதவீத பணியாளர்களுடன் பணியாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை, 11 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரே நாளில் 639 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Corona latest news updates : இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
22:45 (IST)18 May 2020
புதுச்சேரியில் மதுக்கடை திறப்பு திடீர் தள்ளிவைப்பு

‘புதுச்சேரியில் நாளை (செவ்வாய் கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படாது’ என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார். துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகே மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியிருக்கிறார்.

முன்னதாக செவ்வாய் கிழமை மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அரசு கூறியிருந்தது.

21:29 (IST)18 May 2020
அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டணம்- டிடிவி தினகரன் கண்டனம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஊரடங்கு 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகங்களில் நேற்றுவரை விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த உணவுக்கு இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது சரியானதல்ல. வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஏழை,எளிய மக்கள் இதனால் பசியால் வாடும் நிலை ஏற்படும்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.

20:05 (IST)18 May 2020
தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் குறைவு; பீதி வேண்டாம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவான அளவிலேயே உள்ளது. கொரோனா பாதிப்பை கண்டு மக்கள் பதற்றமடையவோ, பீதியடையவோ வேண்டாம்’ என்றார்.

19:28 (IST)18 May 2020
100 டிகிரி ஃபாரன்ஹீட்

‘தமிழகத்தின் 9 இடங்களில் சுட்டெரித்த வெயில்’

தமிழகத்தின் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது வெயில்

* அதிகபட்சமாக, திருச்சி - 105.98, கரூர் பரமத்தி - 104.9, மதுரை விமான நிலையம் - 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

19:07 (IST)18 May 2020
பரிசோதனைகளை குறைக்கவில்லை

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை குறைக்கவில்லை

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தாலே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை

ஆக்கப்பூர்வ கருத்துகளை சொல்லலாம், விமர்சனம் என்ற பெயரில் பழிபோட வேண்டாம்

- அமைச்சர் விஜயபாஸ்கர்

18:23 (IST)18 May 2020
இறப்பு எண்ணிக்கை 78 லிருந்து 81 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 78 லிருந்து 81 ஆக அதிகரிப்பு

7,270 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்

- சுகாதாரத்துறை

18:22 (IST)18 May 2020
4,406ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 234 பேர் குணமடைந்துள்ளதால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 4,406ஆக அதிகரிப்பு

18:22 (IST)18 May 2020
536 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா

* கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,760ஆக உயர்வு

* இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

18:03 (IST)18 May 2020
ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்

பொதுமுடக்கத்தால் கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பூஜைகளை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்

கோயில்கள் அருகே வசிக்கும் உள்ளூர் பக்தர்களை குறைந்த எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும்

- மன்னார்குடி செண்டலங்கார ஜீயர்

17:39 (IST)18 May 2020
கேரளா மாநிலத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்வு!கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

- கேரள முதல்வர் பினராயி விஜயன்

17:37 (IST)18 May 2020
பணியை புறக்கணித்து மின்துறை ஊழியர்கள் தர்ணா

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மீன்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள், மின் துறையை தனியார் மயமாக்க கூடாது என்றும் மாநில அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

17:36 (IST)18 May 2020
உயர்நீதிமன்றத்தில் மனு

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு - விரைவில் விசாரணை

போக்குவரத்து வசதி இல்லாததால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை

17:09 (IST)18 May 2020
வழக்கு தள்ளுபடி

விழுப்புரத்தில் மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிபிஐ விசாரணைக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

16:49 (IST)18 May 2020
டி.என்.பி.எல் ஒத்திவைப்பு

ஜூன் 10 முதல் தொடங்கவிருந்த டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்திவைப்பு

போட்டிகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

16:24 (IST)18 May 2020
22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்

செமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்; நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு பணிகளைத் தொடங்க உத்தரவு - அனைத்து உறுப்புக் கல்லூரி முதல்வர்களுக்கு அண்ணா பல்கலை.பதிவாளர் உத்தரவு!

16:14 (IST)18 May 2020
கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து சேவையை தொடங்க கேரளா திட்டம்

கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து சேவையை தொடங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

முதல்கட்டமாக பேருந்து சேவைகள் மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளன. இதில் ஹாட்ஸ்பாட்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை உயர்த்தவும் கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்கள், மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்திற்கான தடையை தொடரவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது என்று அம்மாநில அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

16:00 (IST)18 May 2020
போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

15:47 (IST)18 May 2020
வெறும் ரூ.1,86,650 கோடிதான்

பிரதமர், நிதியமைச்சர் அறிவித்த பொருளாதார நிதித்தொகை ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடிதான்; இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் - ப.சிதம்பரம் ட்வீட்

15:25 (IST)18 May 2020
ஊரடங்கால் துபாயில் சிக்கிய 178 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை

ஊரடங்கால் துபாயில் சிக்கிய 178 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். வெளிநாடுகளில் தங்கி உள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர 60க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படு​கின்றன. இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்து 691 பேர் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 178 பேர் சென்னை வந்தனர். அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

15:21 (IST)18 May 2020
சலூன் கடைகள் திறக்க அனுமதி

ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி

சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை

பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுரை

முடி திருத்தும் நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்"

கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயம்

அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம் - முதலமைச்சர் உத்தரவு

14:26 (IST)18 May 2020
புதுச்சேரியில் டாஸ்மாக் திறப்பு

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு.

14:11 (IST)18 May 2020
கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிப்பு

மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிப்பு

- தமிழக அரசு

* வழக்கறிஞர் ராஜசேகர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

14:10 (IST)18 May 2020
மேட்டூர் அணை திறப்பு

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது

கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. நடப்பாண்டில் சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்

குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும்

- முதல்வர் பழனிசாமி

13:34 (IST)18 May 2020
சிபிஎஸ்இ 12 தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு. ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

12:55 (IST)18 May 2020
3 மாதம் ஊரடங்கு

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து மாநில அரசு உத்தரவு

12:15 (IST)18 May 2020
தியேட்டர்கள் திறப்பது குறித்து ஆலோசனை

தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து சென்னையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தி வருகிறார். தியேட்டர்களின் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் ஆலோசித்து வருகிறார்.

11:56 (IST)18 May 2020
எம்.ஜி.ஆர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா

கோயம்பேட்டை தொடர்ந்து சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கடை நடத்தி வரும் 150 வியாபாரிகளை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நகரில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

11:28 (IST)18 May 2020
கரூர் மற்றும் தென்காசியில் கொரோனா

கருரில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேருக்கு கொரோனா

11:10 (IST)18 May 2020
வாகனங்களுக்கு ஒருநாள் கட்டணம்

ஊரடங்கு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு செல்லப்பட்டுள்ள வாகனங்களுக்கு, ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனத்திற்கு ஒருநாள் கட்டணமான 50 ரூபாயும், இருசக்கர வாகனத்திற்கு 40 ரூபாயும், சைக்கிளுக்கு 15 ரூபாயும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:48 (IST)18 May 2020
10-ம் வகுப்பு தேர்வில் மாற்றமில்லை - செங்கோட்டையன்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்; தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

10:40 (IST)18 May 2020
சென்னையில் கொரோனா

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,041, திரு.வி.க. நகர் மண்டலத்தில் 790 பேருக்கு கொரோனா உறுதி.

09:57 (IST)18 May 2020
200 பேருந்துகள் இயக்கப்படும்

சென்னையில் அத்தியாவசிய, அவசரப்பணி மற்றும் 50% அரசு ஊழியர்களுக்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தேவை ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். 

09:33 (IST)18 May 2020
இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927லிருந்து 96,169ஆக உயர்வு. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109-லிருந்து 36,824 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,872-லிருந்து 3,029 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

09:20 (IST)18 May 2020
உலகளவில் கொரோனா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.01 லட்சமாக உயர்வு. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,58,047ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,16,651 ஆகவும் உயர்ந்துள்ளது. 

Corona latest news updates : சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Web Title:Corona updates live india lockdown 4 0 extension covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X