எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார், காசர்கோட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும் முதல்வர் பினராய் விஜயன் தகவல் அளித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
திருவனந்தபுரத்தில் முதல் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியது: கோவிட் 19 நோய் கேரளாவில் வேகமாகப் பரவி வருவதால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோம். காசர்கோட்டில் அதிகமான பேர்களுக்கு நோய் பரவி வருவதால் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கண்ணூர் மருத்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கோவிட் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் 200 படுக்கைகளும், 40 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளும், 15 வெண்டிலேட்டர்களும் உள்ளன.
காசர்கோடு மத்திய பல்கலைக்கழகம் ஆரம்ப சிகிச்சை மையமாக மாற்றப்படும். அங்குள்ள பரிசோதனை வசதியை பயன்படுத்த ஐ சி எம் ஆர் இன் அனுமதிக்கு முயற்சி செய்யப்படுகிறது. காசர்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை விரைவில் கோவிட் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இன்று ( வெள்ளி) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கியூபா நாட்டின் மருந்தை பயன்படுத்தலாம் என கருத்து எழுந்தது. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்புகொண்டு இதற்கு அனுமதி கேட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நோய் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து வழிகளும் ஆராயப்படும். நோய் தடுப்பு முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும். நோய் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் அதிக அளவில் தேவைப்படுகிறது.ரேபிட் டெஸ்ட் நடத்துவதற்கு அனுமதி கிடைத்தால் அந்த வாய்ப்பும் பயன்படுத்தப்படும். எச்ஐவி நோய்க்கான மருந்து தற்போது மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தாலுகா மருத்துவமனைகளிலும் இந்த மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். காசர்கோட்டில் அரசும், மக்களும் கூடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்தும் மும்பை, டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களும் அவரவர்களின் வீடுகளிலேயே கண்காணிப்பில் இருக்கவேண்டும். தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்பட நோய் அறிகுறி இருப்பவர்கள் கோவிட் மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களும், அவர்களுடன் தொடர்பு இருந்தவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கண்டிப்பாக தனிமையில் இருக்க வேண்டும். காசர்கோடு அருகில் உள்ள கர்நாடக எல்லையில் மண்ணைபோட்டு சாலையை அடைத்தது சரியல்ல. இதுதொடர்பாக கேரள தலைமைச் செயலாளர் கர்நாடக தலைமைச் செயலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். காசர்கோட்டில் இருந்து தினமும் டயாலிசிஸ் உள்பட சிகிச்சைகளுக்காக கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மருத்துவமனைகளுக்குகாசர்கோட்டிலிருந்து ஏராளமானோர் செல்கின்றனர். தற்போது சாலை மூடப்பட்டுள்ளதால் இந்த நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். கண்ணூரில் அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை. கொரோனா வைரஸ் வெகு தொலைவில் இல்லை. அந்நோய் நம்மை பாதிக்காமல் இருக்க முதலில் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
போலீசார் சிறப்பான முறையில் செயல்பட்டதால் தற்போது ஆட்கள் தேவை இல்லாமல் வெளியே வருவது குறைந்துள்ளது. ஆனால் போலீசாரின் சில நடவடிக்கைகள் குறித்து புகார்கள் வந்துள்ளன. அதை தவிர்க்க வேண்டும். வங்கி அல்லாத மற்றும் சிட் பண்ட் நிறுவனங்கள் உள்பட தனியார் நிதி நிறுவனங்கள் பண மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அடமானம் வைக்கப்பட்டுள்ள நகை ஏல தேதியை நீட்டிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உற்றார் உறவினர் இல்லாத தெருவில் வசிக்கும் மக்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்கும் திட்டம் 5 மாநகராட்சிகளிலும், 26 நகர சபைகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 1545 பேர் இந்த 31 முகாம்களில் உள்ளனர். நம் மாநிலத்தில் லட்சக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்காக மாநிலம் முழுவதும் 4603 முகாம்கள் . இதில் 1,44 ,145 தொழிலாளர்கள் உள்ளனர்.
மது பார்கள் மற்றும் மது கடைகள் மூடப்பட்டது சில மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதைக்கு அடிமையான வர்களுக்கு தேவையான சிகிச்சையும் கவுன்சிலிங்கும் வழங்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மேலும் ஒரு பிரச்சனை வளர்ப்பு மிருகங்களுக்கும், வளர்ப்பு பறவைகளுக்கும் தீனிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக சரக்கு போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். அதற்கு ஆவண செய்யப்படும். வீட்டில் காய்கறி தோட்டம் ஏற்படுத்துவதற்கு விதைகள் கிடைகாவில்லை என்று புகார் வந்துள்ளது. எனவே அதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு தானியங்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சன்னதம் இணையதளத்தில் ஏராளமான இளைஞர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக முன்பதிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது உடனடியாக சரி செய்யப்படும்.
மாநில இளைஞர் நல வாரியம் அமைத்த தொண்டர் படையில் 1.15 லட்சம் தயாராக உள்ளனர். அவசர தேவை ஏற்பட்டால் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். கேரளாவில் தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான தேவைகளுக்கு தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் யாரையும் எந்த இடத்திலிருந்தும் வெளியேற்றக் கூடாது. கடைகளையும் காலி செய்ய வற்புறுத்தக்கூடாது. கேரளாவில் எந்த இடத்திலும் உணவுப் பொருள் தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக டெலிமெடிசின் வசதியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் தெரு நாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் சில கோவில்களில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றுக்கு பக்தர்கள் தான் உணவு அளித்து வந்தனர். தற்போது இக்கோயிலில் பக்தர்கள் யாரும் செல்லாததால் குரங்குகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதை போக்க அந்தந்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியதை கேரளா வரவேற்கிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் நம்முடைய தேவைகளை தீர்க்க அது போதுமானதல்ல. சுகாதாரத் துறையினர், டாக்டர்கள் ஆகியோருக்கான ஆயுள் காப்பீட்டில் தனியார் துறை சேர்க்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பயறு ஆகியவை அனைவருக்கும் கிடைக்கவேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், மேல் உள்ளவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ஒரு மாத இலவச ரேஷன் வழங்கப்படும். அவசர காலகட்டத்தில் பயன்படுத்துவதற்காக உள்ள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனைவரும் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil