DA hike latest news : ஊரடங்கு உத்தரவின் காரணமாக மத்திய அரசின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி உயர்வு நடைமுறை, இந்தாண்டு காலம் தள்ளிப்போவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் மத்திய அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21ம் நிதியாண்டில், 1.13 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 முதல் 21 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்க, கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. இதற்காக, மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.14,510 செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடுமுழுவதும் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் , கடைகள் உள்ளிட்டவைகள் முடங்கியுள்ளன. இதனால் மத்திய அரசிற்கு வர வேண்டிய வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1முதல் நடைமுறைக்கு வரும். ஏப்ரல் மாதம் புதிய திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன் கூடிய சம்பளமும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத அரியர்களும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், ஏப்ரல் மாத சம்பளம் வழங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வு, 3 மாத அரியர் தொடர்பான எந்த அறிவிப்பாணையையும் நிதித்துறை அமைச்சகம் வெளியிடவில்லை. இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வு நடைமுறை இந்த ஆண்டு மேலும் தாமதமாகும் என்ற தகவல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே பரவியுள்ளதால், அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு விவகாரத்தில், மத்திய நிதித்துறை அமைச்சகம் விரைந்து தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil