இந்தியாவில் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இயக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய விமானத்துறை அமைச்சகம், வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. ஆரோக்கிய சேது செயலி, முக கவசம், போர்டிங்கின் போது தீவிர கண்காணிப்பு, லக்கேஜ்களில் நடைமுறைகளில் மாற்றம், விமானத்தின் உள்புறத்தில் உணவு வகைகள், பேப்பர், புத்தகங்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை, விமானநிலையத்திற்குள், அனுமதிக்கப்பட வாகனங்களில் மட்டுமே அனுமதி, நுழைவு வாயில்கள், வெப் செக்கிங் பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவைகள் நிறுவப்பட உள்ளன.
மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவைகளை துவக்குவதில் ஏன் தாமதம்?
இந்த விவகாரத்தில் தாமதம் ஏதும் ஏற்படவில்லை. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு, இந்தியாவில் பாதிப்பு நிலை ஊரடங்கு நிலையின் தற்போதைய தன்மை உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை கருத்தில் கொண்டே, மத்திய அரசு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை துவக்குவதில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
ஊரடங்கு காரணமாக பொதுபோக்குவரத்துகளான பஸ், ரயில் சேவைகள் இன்னும் முழுமையாக துவக்கப்படாத நிலையிலேயே உள்நாட்டு விமான போக்குரவத்துக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்டபின், விமான சேவைகள் இயல்புநிலையை அடையும். தற்போது படிப்படியாகவே, விமானச்சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மற்ற நாடுகளில் என்ன நடைமுறை உள்ளது?
கொரோனா வைரஸ் பாதிப்பால், சர்வதேச அளவில் விமான போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவிதமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இருந்தபோதிலும் அவைகள் குறைந்த பயணிகளுடனோ அல்லது காலியாகவோ விமானங்களை இயக்க துவங்கியுள்ளன.
பயணிகளின் வருகையை பொறுத்து இந்தியாவில் விமான சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
சில மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே?
இந்தியா, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு. ஊரடங்கை தளர்த்திய பின்னர், பொதுப்போக்குவரத்தை துவக்குவதில் மாநிலங்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. இந்த விவகாரத்தில் மாநில முதல்வர்களின் ஆலோசனகளை கருத்தில் கொண்டு வருகிறோம். தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை துவக்குவதற்கு அவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விமான போக்குவரத்து எப்போது சீராகும்?
தற்போது முதற்கட்டமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும்நாட்களில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
கொரோனா ஊரடங்கால், வெளிநாடுகளில் தவித்து வந்த இந்தியர்களை மீட்கும்பொருட்டு இந்திய அரசு சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை துவக்கப்பட உள்ளது. விரைவில் சர்வதேச விமான சேவையும் துவக்கப்படும்.
மும்பை, டெல்லியில் எப்போது சகஜ நிலை திரும்பும்?
மும்பை, டெல்லி நகரங்கள், கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவைகள் நாட்டின் முக்கிய பொருளாதார மண்டலங்களாகவும் இருப்பதால் பல்வேறு விமானநிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை அங்கு அமைத்துள்ளன. விமான நிறுவனங்கள், அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு சேவைகளை துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
விமான சேவைகளை துவக்குவதில் உள்ள இடர்பாடுகள் என்ன?
விமானங்களில் நடுவில் உள்ள இருக்கைகளில், தனிநபர் இடைவெளி கருதி பயணிகள் உட்கார அனுமதிக்க வேண்டாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், விமானத்துறை நிறுவனங்கள் கொரோனா காரணமாக கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதால், இந்த நிபந்தனையை ஏற்க மறுத்துள்ளனர். நடு இருக்கையை காலியாக விட்டால், டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். இந்த கட்டண அதிகரிப்பு, பயணிகளை வெகுவாக பாதிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வந்தேபாரத் மிஷனில் வல்லுநர்களின் அறிவுரையின்படி, விமானத்தில், குளிர்காற்று, மேற்புறத்தில் இருந்து கீழ்புறம் நோக்கி வருமாறு அமைக்கப்பட்டதால், பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. இந்த வழிமுறையை அனைத்து விமான நிறுவனங்களும் மேற்கொள்ள பணித்துள்ளோம்.
விமான நிறுவனங்கள் அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?
மத்திய அரசு, இந்த விவகாரத்தில் விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனது. விமான நிறுவனங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு அவ்வப்போது பரிசீலித்து விமானத்துறையில் சேவைகளை மேம்படுத்தி வருகின்றன. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விதிக்கப்பட்ட விமான எரிபொருளுக்கான மத்திய கலால் வரி 11 சதவீதம் என்பதில் இருந்து 2020 ஜனவரி மாதத்தில் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதம் என்ற அளவிலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருளை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் மத்திய அரசு வைத்துள்ளது என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறேன்.
தற்போதைய நிலையில், 60 சதவீத வான்வெளியே, பொது விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடைக்கல் நீக்கப்பட்டால், விமான சேவை மேலும் வலுவடையும். பொது - தனியார் பங்களிப்பிலான விமான போக்குவரத்து சேவைக்காக, 5 விமான நிலையங்களுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக, தனியார் நிறுவனங்கள், ரூ.13 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா விவகாரத்தால், விமானத்துறைக்கு எவ்வித பாதிப்பு ஏற்பட்டுள்ளது?
கொரோனா பாதிப்பால், அதிகளவு பாதிப்படைந்த தொழில் என்றால் அதில் முதலிடத்தில் விமானத்துறையே உள்ளது. கொரோனா பாதிப்பால், ஆஸ்திரேலியாவின் விர்ஜின், ஏர் மொரிசியஸ் நிறுவனத்தை தொடர்ந்து இந்தியா கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இந்த கொரோனா பாதிப்பை, நாம் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்த துறையில் அடைந்த இழப்பை துரித கதியில் சரிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான நிதி நெருக்கடியிலிருந்து இந்தியா விரைவில் மீளும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
ஏர் இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்திருப்பதால், அதன் சேவை மேலும் வலுப்படும். சரக்கு விமானங்களின் சேவைகளையும் விரிவுபடுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
சுயசார்பு இந்தியா கொள்கையின் மூலம், விமானத்துறையில் அடைந்துள்ள இழப்புகளிலிருந்து விரைவில் மீள்வோம். இதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு அனுமதியுடன் ஏற்கனவே துவக்கிவிட்டோம். சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் விமான சேவைகளை வழங்கி வரும் இந்தியா, அதன் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார அசாதாரண சூழ்நிலையிலிருந்து இந்தியா விரைவில் மீண்டு, விமான போக்குவரத்து துறையை மீண்டும் பெருமைமிக்க துறையாக மாற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.