கர்நாடகாவில், மத வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்த நிலையில், பெங்களூருவில் உள்ள சர்ச்சில், டிரைவ் இன் முறையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து மத ஆன்மீக ஸ்தலங்களும் 80 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டன.. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசின் வழிகாட்டுதல்படி, தனிநபர் இடைவெளியுடன் மீண்டும் மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள அவுட்டர் ரிங் சாலைக்கு அருகிலுள்ள பெத்தேல் ஏஜி சர்ச் சர்வதேச வழிபாட்டு மையத்தின் தேவாலய மைதானத்தில் நேற்று (ஜூன் 14ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை நூற்றுக்கணக்கான கார்கள் வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றன.
கார் கண் கண்ணாடிகள் திறக்கப்பட்ட நிலையில், டிரைவ் இன் முறையில் காருக்குள் இருந்த கிறிஸ்தவர்கள் வெளியே வராமலேயே , மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.ஈ.டி திரைகள் மற்றும் ஒலி பெருக்கிகளின் மூலம் பாதிரியார்கள் நிகழ்த்திய பைபிள் சொற்பொழிவை கேட்டு அதற்கேற்ப கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
Worship On Wheels (WOW) என்ற பெயருடன் நிகழ்ந்த பிரார்த்தனை முறையில், கூட்டத்தை தவிர்ப்பதற்காக கார்களில் வருவோர் மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களில் வருவோர், நேரில் வந்து அமர்ந்து பிரார்த்தனை செய்வோர் ஆகியோருக்கு தனித்தனி நேரங்கள் வகுத்து பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் நடந்தன.
கர்நாடக அரசு, ஜூன் 8ம் முதல் மத வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி அளித்த நிலையில், பல்வேறு தேவாலயங்கள், செயல்பட ஆயத்தமாகி வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2020/06/template-2020-06-15T160316.529-300x200.jpg)
பெத்தேல் ஏஜி சர்ச் பாதிரியார் ஜான்சன் கூறியதாவது, ஜூன் 14ம் தேதி மட்டும் 6 பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.
காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை கார்களில் வந்தவர்களும், காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை பைக்குகளில் வந்தவர்களும் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணி வரை , தேவாலயத்தின் உள்ளேயே பிரார்த்தனை நடத்தப்பட்டது.
9 மணி பிரார்த்தனை கூட்டத்தில் 260 கார்களும், காலை 7 மணி பிரார்த்தனதயில் 85 பைக்குகளும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் இடைவெளியை வாகனங்கள் முறையாக பின்பற்றும் வகையில் தேவைக்கேற்ப தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
குழந்தைகள், வயது அதிகமானவர்கள் இந்த பிரார்த்தனையை ஆன்லைனில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தேவாலய மைதானத்திற்குள் நுழையும் முன்னரே, தெர்மல் சோதனை நிகழ்த்தப்பட்ட பின், சானிடைசர் அளிக்கப்பட்டு, முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பிரார்த்தனையின் இறுதியில் வழங்கப்படும் ரொட்டி, ஒயின் போன்றவைகளை சிறு சிறு பாக்கெட்களில் வைத்து வந்தவர்களுக்கு தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது.
பிரார்த்தனையின்போது, கார்களில் உள்ள ஏசி, போன்கள் உள்ளிட்டவைகள் அணைத்து வைக்கப்பட்டதாக ஜான்சன் மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - As church reopens, a drive-in Mass in Bengaluru parking lot