மகாராஷ்டிரா மாநிலத்தில், வரும் 17ம் தேதி முதல் மது விற்பனை துவங்கப்பட உள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு, இ- டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
முன்னதாக, மாநிலத்தில் மதுவிற்பனை துவங்கப்பட்ட நிலையில்,மதுப்பிரியர்கள், தனிநபர் இடைவெளியை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து, மும்பை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 1,169 மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன. உஸ்மேனாபாத் மற்றும் லத்தூர் பகுதியில் இயங்கி வந்த மதுக்கடைகளும் மூடப்பட்டன.
மதுப்பிரியர்கள், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து மது வகைகளை பெற்றுச்செல்லும் பொருட்டு, புனே பகுதியில் இ - டோக்கன் முறை அமல்படுத்தப்ட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக மகாராஷ்டிரா ஆயத்தீர்வை துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் ஞாயிறு முதல் இ - டோக்கன் முறையில் மதுவிற்பனை நடைபெற உள்ள நிலையில், இன்னும் சில தினங்களில், மதுவகைகளை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.மதுவிற்பனையின் மூலம் மாநிலத்திற்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கிறது. மாநில அரசு, மதுவிலக்கு கொள்கையில் போதிய அளவு திருத்தங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் 1949 மதுவிலக்கு சட்டத்தின்படி, விளம்பரங்கள் உள்ளிட்டவைகளிலும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில், மதுக்கடைகளில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, அங்கு இ - டோக்கன் முறையை அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் 40 சதவீத சரிவு அதாவது அந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1.40 லட்சம் கோடி அளவிற்கு பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் விதமாக, ஆன்லைன் மது விற்பனை மற்றும் மதுவகைகளை வீடுகளுக்கே சென்று தருவதன் மூலம், வருவாய் திரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மே 2ம் தேதிவாக்கில், மதுபானங்களை வாங்க, மதுப்பிரியர்கள் பல கிலோமீட்டர்கள் தொலைவுக்கு கால்கடுக்க நின்ற நிகழ்வு பலமாநிலங்களில் நிகழ்ந்துள்ளதை நாடே பார்த்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் வருவாய்களுக்கு மதுவிற்பனையே மூலாதாரமாக உள்ளது. மதுவகைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவராததால், மாநிலங்கள் அதற்கு கூடுதல் வரிகளை விதித்து வருகின்றன. இதன்மூலம், அம்மாநிலங்கள் அதிக வரிவருவாயை பெற்று வருகின்றன. இந்த கொரோனா ஊரடங்கினால் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளதால், மாநிலத்தின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. 2020-21ம் நிதியாண்டில், மதுபானங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியின் மூலம், ரூ.19,225 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மது வகைகளை ஆன்லைன் முறையில் விற்பனை செய்வதற்கும், வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்வதற்கான நடைமுறைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், இதற்கான அனுமதியை நிதித்துறையிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. பஞ்சாப், மேற்கு வங்கம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த நடைமுறையை வெற்றிகரமாக நடத்திவரும் நிலையில், அந்த மாநிலங்களிடமிருந்து தேவையான நடவடிக்கையை கண்காணிக்க உள்ளோம். சட்டீஸ்கர் மாநிலத்திலும் இ - டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, சட்டீஸ்கர் மாநிலங்களில் அம்மாநில அரசுகளின் மூலமே, மது விற்பனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், 4,159 உரிமம் பெற்ற மதுக்கடைகள், 1,686 ஒயின் ஷாப்புகள், 4,947 பீர் கடைகள் இயங்கி வருகின்றன. மது வகைகளை வீடுகளுக்கே கொண்டு சென்று தருவதற்கு உணவுப்பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏனெனில், போலி மதுபானங்களின் வரத்து அதிகரிக்கும், கள்ளச்சந்தை விற்பனை உயரும் என்பதால் இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளே, தங்களுக்கு அருகில் உள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் மது விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ள இ - டோக்கன் முறையை, மகாராஷ்டிரா மொத்த மது வியாபாரிகள் சங்கமே நிர்வகிக்க உள்ளது. அவர்களே, இதற்கென தனி சாப்ட்வேரை உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் இ- டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த முறையின் மூலம், மதுப்பிரியர்கள், தங்களது மாவட்டத்தில் தங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அவர்கள் கடைக்கு செல்ல விரும்பும் நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.