இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் அடங்குவதற்கு முன்பாகவே, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால், விவசாயப்பயிர்கள் அழியும் நிலை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில், வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அபாயம் இருக்காது என்று வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பு (Locust Warning Organisation (LWO)) தெரிவித்துள்ளது.
வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெட்டுக்கிளிகளின் தாக்குதல் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மத், ஜோத்பூர், நகாவுர், பிகானீர், கங்காநகர், ஹனுமான்கர், ஷிகார், ஜெய்ப்பூர் மாவட்டங்களிலும், மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா, குவாலியம், சீதி, ராஜ்கர், பைதுல், தேவாஸ், அகார் மால்வா மாவட்டங்கில் அதிகமாக உள்ளது.
ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநில எல்லைகளில் ஏப்ரல் 11 முதல் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இருந்த வெட்டுக்கிளி தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.. இந்த பாதிப்பு, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களில் பரவுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, ராஜஸ்தானின் 21 மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் 18 மாவட்டங்கள், குஜராத்தில் 2 மாவட்டங்கள், பஞ்சாபில் 1 மாவட்டத்தில் வெட்டுக்கிளி தாக்குதல் கட்டுப்பாட்டு மண்டல அலுவலகங்கள் என 20 அலுவலகங்கள் திறக்கப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் துணை இயக்குனர் கே எல் குர்ஜார் கூறியதாவது, வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் முடுக்கிவிட்டுள்ளோம். எங்கள் நடவடிக்கைகளிலிருந்து அவைகள் தப்பித்து தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
வெட்டுக்கிளிகள் தாக்குதல் அபாயம், டெல்லியில் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், காற்றின் திசை வேறுபட்டிருப்பதால், டெல்லிக்கு வெட்டுக்கிளிகள் செல்ல வாய்ப்பு மிக மிகக்குறைவே என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அபாயம் குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சகம் கடந்த 21ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெட்டுக்கிளிகள் தங்களது இனப்பெருக்க காலங்களில், சூடான் முதல் மேற்கு ஆப்பிரிக்கா வரை, இந்திய - பாகிஸ்தான் எல்லை வழியாக இடம்பெயரும். அந்தநேரத்தில் அங்கு விளைந்திருக்கும் பயிர்களை உண்டு சேதம் விளைவிக்கும்.
ஜன் மாத முற்பகுதியில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நல்ல மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளிகள் முட்டையிட இந்த இடங்களை தற்போது தேர்வு செய்துள்ளன.
வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர், சித்துர்கர், டவுசா உள்ளிட்ட பகுதிகளிலும், மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்சர், உஜ்ஜயின், சிவ்புரி, உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்சி பகுதியில் தற்காலிக கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலினால் பயிர்ச்சேதம் குறித்த தகவல் இதுவரை வரவில்லை என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய அரசு ரூ.68.65 கோடியை ஒதுக்கியுள்ளது.
மே 15ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கான கூட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் விவகாரத்தில், ராஜஸ்தானிற்கு நிதியுதவியாக ரூ.68.65 கோடியை வழங்க தீர்மானிக்கப்பட்டு 23ம் தேதி அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் ஈரானில் அதிக சேதத்தை விளைவித்திருந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவிலும் தாக்குதலை துவங்கியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் இணைந்து தங்களது எல்லைகளில் வெட்டுக்கிளி தாக்குதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்தியா பாகிஸ்தானிற்கு மாலத்தையான் பூச்சிக்கொல்லி மருந்தை வழங்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.