‘ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ்!’ – ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பில் இந்திய நிறுவனங்கள்

Corona News in Tamil: மருத்துவ இதழான தி லாசண்ட், ரஷ்ய தடுப்பூசி 91.6% கொரோனா வைரஸுக்கு எதிரான செயல்திறனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ள நிலையில், இந்திய தயாரிப்பான கோவாக்சின் மற்றும் கேவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் வெளிநாட்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கும் தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்தலாம் என ஒப்புதல் அளித்துள்ளதால், உலக நாடுகளில் ஸ்பூட்னிக் வி பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த 60-வது நாடாக இந்தியா உள்ளது.

மேலும், இந்தியாவிலேயே, ஆண்டு ஒன்றுக்கு 850 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் வி-யை தயாரிக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், உலகம் முழுவதிலும் உள்ள 425 மில்லியனுக்கும் அதிகமாக உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில், ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கிய அரசை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ள 60 நாடுகளில் வசிக்கும் 3 பில்லியன் மக்கள், அதாவது உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு பயன்படும் வகையில், ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ்களை தயாரிக்க இந்தியாவின் முன்னனி மருந்து நிறுவனங்களான, சுரப்பி பார்மா, ஹெட்டெரோ பயோபார்மா, பேனேசியா பயோடெக், ஸ்டெலிஸ் பயோபார்மா, விர்ச்சோ பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் ரஷ்யா ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. உலகின் முன்னனி மருத்துவ இதழான தி லாசண்ட், ரஷ்ய தடுப்பூசி 91.6% கொரோனா வைரஸுக்கு எதிரான செயல்திறனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, அவசரகால பயன்பாடாக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை தொடர்ந்து, அவசர கால ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசி ஸ்புட்னிக் வி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், கொரோனா வைரஸ் உச்சமடைந்துள்ள வேளையில், தடுப்பூசி பற்றாக்குறை குறித்தான கவலை எழுந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது கொரோனாவுக்கு எதிரான மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Web Title: Corona virus sputnik v vaccine indian pharma companies manufacturing

Next Story
அனுமன் பிறந்தது எங்கே? ஆந்திரா- கர்நாடகா இடையே வெடித்த சர்ச்சை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com