Corona virus tests on mixed vaccines Tamil News : வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறதா என்பதைப் பார்க்க இரண்டு வெவ்வேறு கோவிட் -19 தடுப்பூசிகளைக் கலக்கும் ஒரு ஆராய்ச்சியின் சாத்தியத்தை இந்தியா விரைவில் சோதிக்கத் தொடங்கலாம். தற்போது நாட்டில் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளைப் பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படலாம்.
நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) கீழ், கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் மருத்துவர் என் கே அரோரா கருத்துப்படி, “சில வாரங்களில்” பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக சுமார் எட்டு தடுப்பூசிகள் கலந்து பொருத்தப்படலாம் என்று மருத்துவர் அரோரா கூறினார். இதில் தற்போது இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வி ஆகியவை ஆகிய மூன்று தடுப்பூசிகளும் அடங்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போன்ற அமைப்புகளுக்கும் தடுப்பூசிகளை உருவாக்கித் தயாரித்த நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பால், ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படலாம். வெவ்வேறு தளங்களை அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசிகளை ஒன்றாக வழங்க முடியுமா, முதல் மற்றும் இரண்டாவது அளவுகளில் எந்த தடுப்பூசிகளை நிர்வகிப்பது போன்ற காரணிகளை சோதனைகள் ஆய்வு செய்யும்.
"சிறந்த பாதுகாப்பை வழங்கும் தடுப்பூசிகளின் கலவையை நாங்கள் தேடுகிறோம். தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றன. ஆனால், அவை தொற்று மற்றும் வைரஸ் பரவுவதிலிருந்து நாங்கள் விரும்பிய அளவிற்குப் பாதுகாப்பை வழங்கவில்லை” என்று மருத்துவர் அரோரா கூறினார்.
மேலும், "பல்வேறு காரணிகளை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். உண்மையான கள நிலைமைகளில் சரியான ஆராய்ச்சி ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்… முழு எதிர்மறையும் இல்லாமல் மக்களுக்குச் சிறந்த நோயெதிர்ப்பு பாதுகாப்பைக் கொடுப்பதே முழு நோக்கம்” என்றார்.
“இரண்டு தடுப்பூசிகளும் தனித்தனியாகப் பாதுகாப்பாக இருக்கும்.. ஆனால், அவை ஒன்றாகப் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்… இந்த தடுப்பூசிகள் வெவ்வேறு தளங்களில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், அவை ஒன்றாகக் கலந்தபின் சிக்கல்களை உருவாக்குவதை நாங்கள் விரும்பவில்லை” என்று மேலும் அவர் கூறினார்.
கோவிட் -19 தடுப்பூசிகளின் கலவை, கோவிட் -19 பணிக்குழு, NTAGI, மற்றும் National Expert Group on Covid-19 Vaccine Administration (NEGVAC) ஆகிய இடங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன.
"இந்த சோதனைகள் கோவிட் -19-க்கு எதிராக நாட்டின் தற்போதைய நோய்த்தடுப்பு திட்டத்தில் இணைக்கப்படலாம். கோவிட் -19 தடுப்பூசிகளின் கலவையின் சாத்தியக்கூறு மற்றும் மதிப்பு குறித்த விவாதங்கள் ஒவ்வொரு மட்டத்திலும் முன்மொழியப்பட்டுள்ளன" என்று மருத்துவர் அரோரா கூறினார்.
சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவோவாக்ஸ், Biological E’s Corbevax, ஜைடஸ் காடிலாவின் ஜைகோவ்-டி, ஜெனோவாவின் எம்ஆர்என்ஏ தடுப்பூசி, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் பயோ E பதிப்பு, மற்றும் பாரத் பயோடெக்கின் இன்ட்ரானசல் கோவிட் -19 தடுப்பூசி என தற்போது ஆறு கோவிட் -19 தடுப்பூசிகள் உள்ளன. இந்த ஆண்டு தனது எம்ஆர்என்ஏ தடுப்பூசியை நாட்டிற்குக் கொண்டு வர ஃபைசருடன் அரசாங்கம் கலந்துரையாடலில் உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.