ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் கொரோனா பரவல் மையமான சென்னை கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்பு கணிசமாக இருப்பதால், இது சுகாதார அதிகாரிகளுக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது. கோயம்பேடு உடன் தொடர்புடைய தொற்றுகள் ஆந்திராவில் மே 12-ம் தேதி முதல் பதிவான தொற்று எண்ணிக்கையில் கணிசமான அளவு இடம்பெற்றுள்ளன.
ஆந்திராவில் புதன்கிழமை பதிவான 68 புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையில் 10 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், அம்மாநிலத்தில் கோயம்பேடுடன் தொடர்புடைய கொரோன தொற்று எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது.
மே 12-ம் தேதி ஆந்திராவில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 20 பேர் கோயம்பேடு மார்க்கெட் உடன் இணைக்கப்பட்டனர். மே 14-ம் தேதி பதிவான புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையில் 36 பேரில் 21 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதே போல, மே 15-ம் தேதியில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 57 பேரில் 28 பேருக்கும், மே 16-ம் தேதியில் 48 பேரில் 31 பேருக்கும், மே 18-ம் தேதியில் 52 பேரில் 19 பேருக்கும் கோயம்பேடு சந்தை தொற்றுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
ஆந்திராவில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமான சித்தூரில் கோயம்பேடு பகுதியுடன் தொடர்புள்ள 74 கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து சித்தூர் மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.பெஞ்சுலியா கூறுகையில், “சித்தூரில் கோயம்பேடு தொடர்பில் கொரோனா கண்டறியப்பட்ட 74 பேரில் 40 பேர் கோயம்பேட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள். மீதமுள்ளவர்கள் அவர்களுடைய முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர் கொண்டவர்கள். கோயம்பேட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் அனைவரும் காய்கறி மற்றும் பூக்கள் மொத்த விற்பனையாளர்கள். அவர்கள், ஆந்திராவில் உள்ள விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்கி கோயம்பேடு சந்தையில் விற்கிறார்கள்” என்று கூறினார்.
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சித்தூரில் 22,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைக் கண்டறிய அதிகாரிகள் போராடுகிறார்கள்.
கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்புள்ள நோய்த்தொற்று முதன்முதலில் மே 11-ம் தேதி சித்தூரில் பதிவாகியது. ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் இருந்து திரும்பிய 8 காய்கறி மொத்த விற்பனையாளர்கள் சமூக சோதனையின் போது கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவு வந்தது. அடுத்த 9 நாட்களில் மேலும் 66 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
சித்தூர், நெல்லூர், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, கடப்பா, கர்னூல், அனந்தபூர் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து இதே போன்ற தொற்றுகள் பதிவாகியுள்ளன. நெல்லூர் மாவட்டத்தில் கோயம்பேடு தொடர்பில் 40 பேருக்கு நோய்த்தொற்று பதிவாகியுள்ளன.
காய்கறிகள் அத்தியாவசியப் பொருட்கள் என்பதால் காய்கறி விற்பனையாளர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் சென்னைக்குச் சென்றபோது, முகக்கவசம் அணிவது, சமூக விலகல் போன்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்கவில்லை. இப்போது, இங்குள்ள விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை வாங்குவதற்குச் சென்று சென்னையில் மொத்த சந்தைகளில் விற்கும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் தொற்று மையமாக மாறிய பிறகு, அங்கிருந்த கடைகள் பிரிக்கப்பட்டு இரண்டு இடங்களுக்கு மாற்றப்பட்டது. ஒரு இடத்தில் மலர் சந்தையும், மற்றொரு இடத்தில் காய்கறி சந்தையும் அமைக்கப்பட்டன. இதில் சில்லறை விற்பனையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இருப்பினும், ஆந்திராவைச் சேர்ந்த காய்கறி மற்றும் மலர் மொத்த விற்பனையாளர்கள் இந்த 2 சந்தைகளுக்கும் தொடர்ந்து செல்வதால் சுகாதார அதிகாரிகள் இன்னும் கவலை கொண்டுள்ளனர். “மொத்த விற்பனையாளர்களை சந்தைகளுக்குச் செல்வதை நாங்கள் நிறுத்தினால், அவர்கள் பாதிக்கப்படும் விவசாயிகளிடமிருந்து வாங்குவதை நிறுத்திவிடுவார்கள். அவர்கள் காய்கறிகளை உள்நாட்டில் மலிவான விலையில் விற்க வேண்டும் அல்லது அவற்றைக் கீழே கொட்ட வேண்டும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. அதனால், அங்கே வேலை செய்துவந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றதால், கோயம்பேடு தொடர்பில் கணிசமான அளவு கொரோ தொற்று அதிகரித்தது. அதனால், கோயம்பேடு கொரோனா தொற்று மையமாக மாறியது. இந்த நிலையில், கோயம்பேடு தொடர்பில் ஆந்திராவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நோய்த்தொற்று மையமாகி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைத் தாக்கிய கோயம்பேடு மார்க்கெட், இப்போது ஆந்திராவை தாக்கியுள்ளதால் அம்மாநில சுகாதார அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.