கொரோனா சிகிச்சைக்கு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், இந்த மருந்து ஏற்றுமதிக்கான தடையை, மத்திய அரசு பகுதிவாரியாக தளர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த வாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும், கொரோனா பாதிப்புகள் குறித்து விவாதித்தனர். கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை, அமெரிக்கா மார்ச் மாதம் ஆர்டர் செய்திருப்பதாகவும், அதனை அனுப்பி வைக்கும் படியும் அப்போது மோடியிடம் டிரம்ப் வலியுறுத்தினார். ‘எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்’ என மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், கொரோனா வைரஸ் தொடர்பான கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது, இந்தியாவிடம் தாங்கள் கோரியுள்ள ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்தை, புதுடில்லி அனுப்பாத பட்சத்தில், அவர்கள் அதிர்ச்சியை சந்திக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, இந்தியாவுடன் அமெரிக்கா நீண்ட காலமாக வர்த்தக உறவு மேற்கொண்டு வருகிறது. இந்தியா மற்ற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. அவரின் இந்த முடிவை நான் ஏற்கவில்லை. மோடியுடனான தனது சந்திப்பு, மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தியா தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிடில், அது அவர்களுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை அவர்கள் அறிவர் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 7ம் தேதி) பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளதாவது, கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில், மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோராகுயினை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய மக்களுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்ததற்கு பின்னரே, இந்த மருந்தை தேவைப்படும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மருந்து நிறுவனங்கள் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்களது தேவைகளை பொறுத்து எஞ்சியுள்ளவைகளை, அவர்களின் தேவைகளை பொறுத்து ஏற்றுமதி செய்யப்படும்.
மருந்துகளின் உற்பத்தி மற்றும் அதன் இருப்பு உள்ளிட்டவைகளை உறுதி செய்தபிறகு, ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். மருந்து ஏற்றுமதிக்கு தடை என்ற முடிவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரசிட்டமால் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகள் உரிமம் பெற்ற மருந்து வகைகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தேவை மற்றும் தற்போதைய நிலை உள்ளிட்டவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தேவை மற்றும் இருப்பு நிலவரங்களை பொறுத்தே, ஏற்றுமதி திட்டம் வகுக்கப்படும்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் டேப்லெட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், இந்த மருந்தை கோவிட் 19 நோயாளிகளுக்கு வழங்கிவருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பிற்கு 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதற்கட்ட ஆய்வு முடிவுகளின் படி, டிரம்ப் நிர்வாகம், ஹைட்ராக்சிகுளோரோ குயின் மருந்தை அதிகளவில் இருப்பு வைத்திருக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Coronavirus donald trump hydroxychloroquine trump india donald trump hydroxychloroquine ban