கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கு பிறகு, நுரையீரல் திசுக்கள் தொடர்பான ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள கர்நாடகா டாக்டர்கள் மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ், மனித உடலில் நுரையீரலையே நேரடியாக தாக்குகிறது. எனவே, கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளுக்காக, மரணமடைந்தவரின் உடலில் உள்ள நுரையீரலைக்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஹெல்த் சயின்ஸ் பல்கலைக்கழகத்திற்கு., இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ( ICMR) பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த தகவலை பல்கலைகழக நிர்வாகம் மறுத்துள்ளது.
அப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ் சச்சிதானந்தா கூறியதாவது, கொரோனா விவகாரத்தில் நாங்கள் எத்தகைய ஆய்வு நடவடிக்கைகளும் தயாராகவே உள்ளோம். நுரையீரல் ஆய்வு தொடர்பாக எங்களுக்கு எவ்வித பரிந்துரையும் வரவில்லை என்று அவர் கூறினார்.
போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டிருந்த கொரோனாவால் மரணமடைந்தவரிடம் இருந்து எடுக்கப்பட்ட நுரையீரலை கொண்டு ஆய்வு மேற்கொள்ள ராஜீவ்காந்தி பல்கலைகழகத்திற்கு பணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட யாரும் முன்வரவில்லை என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை ஆணையர் பங்கஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மார்ச் 10ம் முதல், கர்நாடகாவில் 44 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை இதயம், நுரையீரல் போன்ற எந்தெவாரு பாகமும் ஆராய்ச்சிக்காக எடுக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணம் குறித்த உண்மைத்தன்மையை அறியவே போஸ்ட் மார்ட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போஸ்ட் மார்ட்டம் செய்யும்போது உடலில் நன்றாக இருக்கும் இதயம், நுரையீரல் உள்ளிட்ட பாகங்களை, மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக்கொள்வது வழக்கமான நடைமுறைதான். சீனாவில் கூட, ஜோங்னான், வுஹான் பல்கலைகழக மருத்துவமனைகளில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உறுப்புகளை கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். அந்த நுரையீரல்களில் செயற்கையாக ரத்தஓட்டம், ஆக்சிஜன் ஏற்றி அதை பரிசோதித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிஎம்ஆர் சமீபத்தில் வெளியிட்டுள்ள பரிந்துரைகளில் கூட, இந்தியாவில் கொரோனாவால் மரணமடைபவர்களின் உடற்கூறு ஆய்வு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவைரஸ், மனித உடலில் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை எவ்விதம் பாதிக்கின்றது என்பது குறித்த ஆராய்ச்சிகள் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போதும் அசாத்திய மரணம் அடைபவர்களின் உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்து அவற்றில் உள்ள உறுப்புகளை கொண்டு புதிய ஆய்வுகளை மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுநெறிமுறைகளை வகுத்துள்ளது.
கொரோனா பாதித்தவரின் உடலில் இருந்து நுரையீரலை பிரித்தெடுப்பது என்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்கென்று பிரத்யேக டாக்டர்கள் வேண்டும். இதற்கு மரணமடைந்தவரின் குடும்பங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். யாரும் தனியாக நுரையீரலை எடுக்க அனுமதிப்பதில்லை எ்ன்று பெங்களூரு மருத்துவ கல்லூரி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் மரணமடைந்தவரின் உடல் உறுப்புகளை ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்வது என்பது சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் தடையில்லா சான்றிதழ் வழங்கவேண்டும், அதுமட்டுமல்லாது ஐசிஎம்ஆரின் வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இதில் மத நம்பிக்கைகள் உள்ளிட்டவைகள் இருப்பதால், இந்த ஆய்வுகளை குறிப்பிட்ட ஆய்வுகளுக்காகவும், முக்கியத்துவம் கருதி மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.