Coronavirus in India : பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அன்று அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை தடுக்க விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களை வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, தடுப்பூசி வீணாவதை குறைக்க சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் ஆர்.டி. பி சிஆர் சோதனைகளை அதிகரிப்பது போன்றவை குறித்தும் பேசினார். கடந்த சில வாரங்களில் 70 மாவட்டங்களில் கொரொனா எண்ணிக்கை 150% அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவித்தார்.
நோய் தொற்று குறைவதை கண்ட பிறகு சில மாநிலங்களில் திடீரென நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிக்கை வெளியாகி வருகின்றன. மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாதுகாப்பு மண்டலங்களாக செயல்பட்ட இடங்களிலும் நோய் தொற்று அதிகரித்து வருவதற்கான சமிக்ஞை வெளியாகி வருகின்றன. நாட்டின் 70 மாவட்டங்களில் கடந்த சில வாரங்களில் நோய்தொற்று எண்ணிக்கை 150 சதவீதமாக அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த தொற்றுநோயை தற்போது தடுக்கவில்லை என்றால் மீண்டும் நாடு தழுவிய அளவில் பெரிய நோய்த்தொற்று மையமாக இந்தியா செயல்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே நாம் விரைவாகவும் அதிகமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மோடி அந்த கூட்டத்தில் தெரிவித்தார். இந்த மாதத் துவக்கத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடிவு மேற்கொண்ட பிறகு தடுப்பூசி விநியோகத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் பிரதமர் பேசியுள்ளார்.
நாட்டில் தடுப்பூசி அளிக்கப்படும் வேகம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3 மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் தடுப்பூசி வழங்கப்படுவதை போன்றே தடுப்பூசிகள் வீணாவதையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தடுப்பூசி வீணாகும் விகிதம் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க : கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா; முகவரியை தரமால் ”எஸ்கேப்”
தடுப்பூசிகள் ஏன் வீணடிக்க படுகின்றன என்பதை மாநிலங்கள் ஆராயவேண்டும். வீணடிக்கப்படுகிறது என்பது மற்றொரு பயனாளிக்கு தடுப்பூசி போடுவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது என்று அர்த்தம். தடுப்பூசி வீணாவதை தடுக்க உள்ளூர் மட்டத்தில் திட்டமிட்டு, நிர்வாக குறைகளை உடனடியாக மாநிலங்கள் சரிசெய்யவேண்டும். தடுப்பூசி விரயமாவதை ஜீரோ நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
தடுப்பூசி மையங்களை அதிக அளவில் திறக்கவும் தடுப்பூசி காலாவதி தேதி குறித்து விழிப்புடன் இருக்கவும் மோடி மாநில அரசுகளை கேட்டுக் கொண்டார். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். மையங்கள் முன்கூட்டியே செயல்பட்டால் தடுப்பூசிகள் வீணாவதும் குறைக்கப்படும். தடுப்பூசி காலாவதி தேதி குறித்த சிக்கல்களும் உள்ளன. முதலில் வந்த மருந்துகளை முதலில் பயன்படுத்த வேண்டும். எவ்வாறு ஆயினும் பின்னர் வந்த அளவுகளை மாநிலங்கள் பயன்படுத்தினால் தடுப்பூசி வீணாகும் சூழல்தான் மீண்டும் ஏற்படக்கூடும்.
இதற்கு முன்பு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக கருதப்பட்ட சிறு நகரங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த நேரத்தில் ஆரம்பகட்டத்தில் பாதிக்கப்படாத இரண்டு மற்றும் மூன்று அடுக்கு நகரங்களுக்கு அருகே இருக்கும் இப்பகுதிகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களை அடைந்தால் கிராமங்களுக்குள் நுழைய முடியும்.
கிராமங்களில் ஏற்படும் நோய்த் தொற்று நோய் கையாள்வது மிகவும் சவாலான ஒன்றாக அமைந்து விடும். எனவே சிறிய நகரங்களில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். சிறிய நகரங்களில் உள்ள அவசர உதவி வாகனம் வலையமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தற்போது நாடு முழுவதும் மக்கள் அதிக அளவில் பயணிக்கின்றனர் எனவே மாநிலங்களிடையே பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பல மாநிலங்கள் விரைவான ஆன்டிஜன் சோதனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இது தவறான எதிர்மறை முடிவுகளைக் காட்டும். சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் தொடர்புகளையும் குறுகிய காலத்தில் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது . டிஆர் பிஸிஆர் சோதனை விகிதத்தை 70 சதவீதத்திற்கும் மேல் வைத்திருக்க வேண்டும். கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர், உபி போன்ற பல மாநிலங்கள் விரைவான சோதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இது விரைவில் மாற்றப்பட வேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் தொடர்புகளை கண்காணிப்பதற்கான SOPஐ பின்பற்றுவதற்கு பொறுப்பினை அதிகரிக்க வேண்டும்.
முகக்கவசங்கள் அணிய வேண்டியதன் தேவையை கூறும் உள்ளூர் நிர்வாகங்களின் நடவடிக்கைகள் தற்போது குறைந்துள்ளது. நிர்வாக ரீதியிலான பிரச்சனைகளை உடனே கண்டறிந்து அதில் கவனம் செலுத்த வேண்டும். ஏன் இந்த மாவட்டங்களில் குறைவான பரிசோதனை மற்றும் குறைவான தடுப்பூசி பயன்பாடு ஆகியவை உள்ளன என்று கேள்வி எழுப்பிய அவர், சிறந்த நிர்வாகத்திற்கான சோதனை இது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் பெற்ற நம்பிக்கை அலட்சியமாக மாறக்கூடாது என்று அவர் கூறினார்.
திறமையான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு மறுசீரமைப்பு திட்டங்களை மாநில அரசுகள் அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் மோடி. மக்களை அச்சுறுத்தக் கூடாது. அதே நேரத்தில் பிரச்சனையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளை இணைப்பதன் மூலம் மாநிலங்கள் புதிய யுத்திகளை கையாள வேண்டும் என்றும் நேற்றைய மாநில முதல்வர்களுக்கான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil