சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபட்ட ரேபிட் டெஸ்ட் கிட் சாதனங்கள் பேசும் பொருளாகி உள்ள நிலையில், தென் கொரிய நிறுவனங்களிடமிருந்து டெஸ்ட் கிட் சாதனங்களை கொள்முதல் செய்வதையும், உற்பத்தி செய்வதையும் இந்தியா அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அதிகாரிகள் நேற்று இதுகுறித்து கூறுகையில்,"ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள எஸ்டி பயோசென்சர் தயாரிப்பு கூடத்தில் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் சாதனங்களை தயாரித்து வழங்க தென் கொரிய நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தனர். இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஒரு வாரத்தில் தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த சில வாரங்களில், தேவைகளுக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) செவ்வாய்க்கிழமை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.ரேபிட் டெஸ்ட் கிட தொடர்பான விவரங்களை களத்தில் நேரடியாக மருத்துவ குழுக்கள் ஆய்வு செய்த பின்னர், விரிவான ஆலோசனையை வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.
சியோலில் உள்ள இந்திய தூதரகம், தென் கொரிய மருந்து நிறுவனமான ஹூமாசிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ரேபிட் டெஸ்ட் கிட கருவிகள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோதனைக் கருவிகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் இந்தியாவில் இருந்து பெறப்படுகின்றது.
கடந்த வாரம் சீனாவிலிருந்து இந்தியா 6.5 லட்சம் சோதனை கருவிகளை இறக்குமதி செய்ததது. இது தவிர, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து சோதனை கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய இந்தியா தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.