Coronavirus Indian crew members of quarantined ship Diamond Princess returned India
கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற நிலையில் உலகம் முழுவதும் இந்த நோயில் இருந்து தப்பித்துக் கொள்ள தற்காப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் ஜப்பானின் யொகொஹாமா கடற்கரையில் இருந்து கிளம்பிய டையமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் பயணித்த ஹாங்காங் பயணிக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த கப்பல் கடற்கரையில் “அப்சர்வேசனுக்காக” 14 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. யாரையும் கப்பலில் இருந்து கீழே இறங்க அனுமதிக்கவும் இல்லை. 14 நாட்களில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. 3700 பேர் பயணித்த கப்பலில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வந்தனர்.
Advertisment
14 நாட்கள் 'குவாரண்டைன்’ காலம் முடிவுற்ற நிலையில் அந்த கப்பலில் பயணித்த இந்தியர்கள் அனைவரும் இன்று காலை இந்தியா வந்தடைந்தனர். ஏர் இந்தியா விமானம் மூலம் 119 இந்தியர்கள், மேலும் இலங்கை, நேபால், தென்னாப்பிரிக்கா மற்றும் பெரு நாட்டினை சேர்ந்த 5 நபர்களும் பத்திரமாக இந்தியா திரும்பினார்கள். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார். ஏர் இந்தியாவின் பணிக்காக அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
Air India flight has just landed in Delhi from Tokyo,carrying 119 Indians & 5 nationals from Sri Lanka,Nepal, South Africa&Peru who were quarantined onboard the #DiamondPrincess due to #COVID19. Appreciate the facilitation of Japanese authorities.
இந்தியா வந்தவர்களில் யாருக்காவது நோய் தொற்று இருக்கிறதா என்பதை சோதனையிட, மேலும் 14 நாட்களுக்கு மனேசார் ராணுவ முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட உள்ளனர். தங்களை காப்பாற்றுமாறு மோடிக்கும் இந்திய அரசுக்கும் கோரிக்கை வைத்தார் அந்த கப்பலில் தலைமை சமையற்கலைஞராக பணியாற்றி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பினாய் குமார் சர்க்கார். அந்த வீடியோ வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
அவரிடம் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்ட போது ”இந்திய தூதரகமும், எங்களுடைய நிறுவனமும் எங்களை திருப்பி அழைத்துக் கொள்ள முனைப்பு காட்டியது. கடந்த வாரம் நாங்கள் மீண்டும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். எங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று மருத்துவ சான்று தரப்பட்டது. சரியாக நேற்று (26/02/2020) மதியம் 1 மணி அளவில் இந்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் யொகோஹாமா துறைமுகத்தில் இருந்து டோக்யோவில் இருக்கும் ஹெனாந்தா விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். பின்னர் அங்கிருந்து இந்தியா வந்தோம்” என்று கூறினார் அவர்.
பினாய் குமார் வெளியிட்ட வீடியோ
சிலிகுரியில் இருக்கும் பினாய் குமார் சர்க்காரின் சகோதரரிடம் பேசிய போது “என்னுடைய சகோதரன் இன்னும் சில நாட்களில் வீடு திரும்ப உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் டெல்லியில் சென்று அவரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவருடைய வருகைக்காக காத்திருக்கின்றோம்” என்று அவர் கூறினார்.
ஜப்பானில் இருந்து மட்டுமில்லாமல் வங்கதேசம், மியான்மர், மாலத்தீவுகள், சீனா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மடகாஸ்கரில் இருந்து 76 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானங்களின் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்றும் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilஇந்த இணைப்பை க்ளிக் செய்யவும்