Covid-19 Cases Update: தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 161 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி தமிழகத்தில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 6 நாட்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டை தொடர்ந்து, கரூர் மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமானது. சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும், நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரோனாவுக்குப் பிறகு வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்க்க, தமிழ்நாடு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில், சிறப்பு குழு ஒன்றை நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாகத்தான் தளர்த்த முடியுமென, மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மே 3-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில், மக்களிடையே குழப்பம் இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி இருக்கிறார். சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கையகப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை அனைத்து பள்ளிகளையும், தங்களிடம் ஒப்படைக்குமாறு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Coronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
ஊட்டியில் 15,000 மலர் தொட்டிகளில் கொரோனா விழிப்புணர்வு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. கோடை ஸீஸனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவர 3 லட்சம் மலர் செடிகள் மலர் பாத்தியில் நடவு செய்யப்பட்டது. தற்போது இந்த 3 லட்சம் மலர் செடிகளில் பல வண்ணத்தில் 150 ரகம் மலர் பூத்து குலுங்குகிறது. மேலும் 5000 பூந்தோட்டிகளில் கொரோணா விழிப்புணர்வு மலர் அலங்காரமாக கொரோனா வைரஸின் உருவத்தையும் STAY HOME STAY SAFE என்ற வாசகத்தையும் மலர்களால் சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும் 124 - வது மலர் கண்காட்சி மே 15 முதல் 19 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணத்தால் இந்த ஆண்டு மலர் கண்காட்சி இணையதளம் வாயிலாக வெளியிட தோட்டகலை துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏனைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி செய்ய வேண்டும்.
ரெட் ஸோன் அல்லாத ஆரஞ்ச், கிரீன் மண்டலங்களில் மாநில அரசுகள் நிலைமைக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்க மத்திய அரசின் உள்துறை அறிவிக்கை வழிகாட்டுகிறது.
ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும்.
மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை
* பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
* அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது
மத்திய அரசு அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன
தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், உள்ளிட்ட 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன
இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
அதன் படிப்படையில், தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாகவும், தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனுமதிப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
மானியம் இல்லா சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை அதிரடியாக குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இந்தியன் ஆயில் கார்ப்பேரசன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதிய விலையை குறிப்பிட்டுள்ளது. அதன்படி
டெல்லி - ரூ.581.50 - குறைவு ரூ.162.50
கோல்கட்டா ரூ..524.50 குறைவு ரூ.190
மும்பை ரூ..579 குறைவு ரூ.135.50
சென்னை - ரூ..569.50 குறைவு ரூ.192
ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இததொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும். கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.145.48 கோடி பெறப்பட்டுள்ளது .அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.110 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில், 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது. நோய் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் நிச்சயம் பலன் இருக்கும். கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றில் 28 நாட்களாக தொற்று கண்டறியப்படவில்லை. கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால், கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி தற்போது மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 25 பேர் குணமடைந்தனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி பெண்ணும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 1,773 பேர் குணமடைந்த நிலையில் 459 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,610 லிருந்து 35,403ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,075லிருந்து 1,147 ஆகவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,373 லிருந்து 8,889 ஆகவும் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் 10.95 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் மேலும் 30,825 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,95,019 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,201 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,856 ஆக உயர்ந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights