Covid-19 Cases Update : தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரியை, மாநில அரசு உயர்த்தியுள்ளதன் காரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்கிறது.
தமிழகத்தில், இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தாராளமாக தளர்த்தி, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். தொற்று பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலமான, கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து, மற்ற பகுதிகளில், கடைகள், நிறுவனங்கள் செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச ஊழியர்களுடன், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட, தனியார் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி தரப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தனிக் கடைகளை திறக்க, பச்சைக்கொடி காட்டியுள்ள அரசு, பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலங்களுக்கு தடை தொடரும் என, தெரிவித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஊரடங்கு, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இரண்டாம் கட்டமாக நிவாரண உதவிகள் மற்றும் சலுகைகளை அறிவிப்பது தொடர்பாக, மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள, சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டவாரியாக விவரம்:
சென்னையில் இன்று அதிகபட்சமாக 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து விழுப்புரத்தில் 33, கடலூர் - 09, கள்ளக்குறிச்சி - 06, கோவை -04, திருவள்ளுர், அரியலூர் தலா -2 பேர் உள்பட மொத்தம் 266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,689-இல் இருந்து 40,263 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 1,306 பேர் உயிரிழந்தனர். இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,887 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
சென்னையில் பிளம்பர், எலக்ட்ரிஷியன் வீட்டு வேலை பணியாளர்களுக்கு பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான வரைமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அனுமதி பெற விரும்புபவர்கள் http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணியாற்றலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டுவரியை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் மதிப்பு கூட்டுவரி உயர்வால் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.25 டீசல் லிட்டருக்கு ரூ.2.50 உயர்கின்றன.
சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது; 55% வசதிகள் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது; எந்த சூழலையும் எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதற்கு மத்திய குழு பாராட்டி உள்ளது.
புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் 39 ஆயிரத்து 980பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 644 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 10 ஆயிரத்து 633 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலகட்டம் தற்போது 12 நாட்களாக அதிகரித்துள்ளது; நம் நாட்டின் இறப்பு விகிதமான 3.2% தான் உலகிலேயே குறைவான இறப்பு விகிதம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
சென்னை டி.ஜி.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இரண்டு காவலருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து கட்டுப்பாட்டு அறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகு மூடப்பட்டது.
பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் இரண்டாவது தவணையாக 500 ரூபாய் உதவித்தொகை அளிக்கும் பணி திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது.
ஒரே நேரத்தில் வங்கிகளில் அதிகம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழைகள், பெண்கள், முதியவர்களுக்கு உதவும் வகையில் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.
அதில் ஒரு பகுதியாக, பெண்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் ஏப்ரல் மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு 500 ரூபாய் வீதம் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் தவணைத் தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இரண்டாவது தவணையாக ரூ.500 அளிக்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு, எந்த அளவில் அமுல்படுத்தப்படுகிறது, என்பதை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசின் உயர் அதிகாரி திருப்புகழ் தலைமையில், 5 பேர் கொண்ட மத்தியக்குழு, கடந்த 24-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்தது. அந்தக் குழு சென்னையில் ஒரு வாரத்திற்கு மேலாக தங்கியிருந்து, நோயின் தாக்கம், ஊரடங்கு அமல்படுத்தப்படுவது பற்றி ஆய்வு நடத்தியது.
மேலும், தமிழக முதலமைச்சர், அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து மத்திய குழு ஆலோசனைகளையும் நடத்தியது. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளை பார்வையிட்டு, சிகிச்சை முறைகளையும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, மத்திய குழு தனது பணிகளை முடித்துக்கொண்டு, இன்று பகல் ஒரு மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து, ஏர் இந்தியா தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இக்குழு தங்கள் அறிக்கையை, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம், ஓரிரு நாட்களில் சமர்பிப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி பட்டாலியனைச் சேர்ந்த 135 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சி.ஆர்.பி.எப். உயரதிகாரியுடன் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட நோய்த்தொற்றால், அமெரிக்காவில் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவை விட 3 மடங்கு மக்கள்தொகை உள்ள இந்தியாவில், பிரதமரின் கடும் முயற்சியால் நோய் பரவவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தமிழகத் தொழிலாளர்கள் தமிழகம் திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்..
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் நான் தொடங்கிவைத்த ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் குறித்து தாங்கள் அறிந்திருக்கலாம்.ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினேன். அப்போது அவர்கள், தங்களுக்கு மாநில அரசின் நிவாரண உதவிகள் தேவை என்றும் தமிழகத்துக்கு விரைவில் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.எனவே, மகாராஷ்டிராவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவிகள் கிடைக்கவும், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு அவர்கள் உடனடியாகத் திரும்பவும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி மொத்த வணிக சந்தை மொத்த கொரோனா தொற்று சந்தையாக மாறியிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி கோயம்பேட்டில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 119. சென்னையில் 52, அரியலூர் 22, விழுப்புரம் 20, கடலூர் 17, காஞ்சிபுரம் 7, பெரம்பலூர் 1 என பட்டியல் நீள்கிறது! என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு விவகாரத்தில், தேவையற்ற அச்சமும் வேண்டாம், கவனக் குறைவும் வேண்டாம். முதியோர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கவுரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து இரு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மருந்து பொருட்களுடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்தன. சுகோய், மிக் மற்றும் ஜாகுவார் ஆகிய 9 போர் விமானங்கள் டெல்லியின் வான்பரப்பில் பறந்து மருத்துவர்களை கவுரவித்தன.
#WATCH Indian Air Force aircraft showers flower petals on Victoria Hospital in Bengaluru to express gratitude towards health workers for their contribution in the fight against #COVID19 pandemic. #Karnataka pic.twitter.com/bkBfj80kqk
— ANI (@ANI) May 3, 2020
கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா உறுதியானதின் எதிரொலியாக, விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், கடந்த, இரண்டு மாதங்களாக பரவி வரும், கொரோனா வைரஸ், தன் தன்மையில் மாற்றம் அடைந்துள்ளதா என்பதை அறிய, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு வந்தவர்களிடம் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதால், பல்வேறு தன்மைகள் கொண்ட வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights