கற்பனை செய்யவே பயங்கரமா இருக்கு... ஊரடங்கை மீறாதீங்க மக்களே!

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறினால் கொரோனா பரவல் அதிகரித்து மே மாதத்தில் மக்கள் பெரிய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ள தகவல்...

கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்திலேயே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் அனைவரும் பின்பற்றுவது அவசியம். ஊரடங்கை மக்கள் மீறினால் அதன் விளைவு கடுமையாக இருக்கும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறினால் கொரோனா பரவல் அதிகரித்து மே மாதத்தில் 60,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதிகபட்சமாக 1 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலக அளவில் இதுவரை 22,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சிலர் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் அவசியமில்லாமல் வெளியில் சென்று சுற்றி வருகின்றனர். இதனால், அவசியம் இல்லாமல் வெளியே சுற்றி வருபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறினால் அதற்கு நாம் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறினால் கொரோனா வேகமாக பரவி மே மாதத்தில் 60,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாவர்கள் என்றும் அது 1 லட்சம் பேர் வரை எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸுடன் இணைந்து நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையம் (சி.டி.டி.இ.பி) தயாரித்த மாதிரி கணிப்பு அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டுள்ளது. “கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான சூழலை மதிப்பிட்டுள்ளோம். நாங்கள் ஒரு கடினமான கணக்கீட்டைப் பயன்படுத்துகிறோம், தெலங்கானாவிற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே ஒரு எண்ணிக்கையை கணித்துள்ளோம்” என்று ஒரு மூத்த சுகாதார அதிகாரி கூறினார்.

நேற்று புதன்கிழமை 39.64 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தெலங்கானாவில் 39 கொரோனா பாதிப்பு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 126 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேர் பதிவாகியுள்ளனர். 81.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் 19 கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன.

இந்த பகுப்பாய்வு, இந்தியாவில் 13 கோடி முதல் 25 கோடி கோவிட் -19 நோய்த் தொற்றுகள் கொண்டவர்களுடன், தொற்று அறிகுறி உள்ளவர்கள், அறிகுறி இல்லாதவர்கள் என மருத்துவமனைகளில் சேர்க்கப்படலாம் என்றும் 12 லட்சத்து முதல் 25 லட்சம் பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று பகுப்பாய்வு காட்டுகிறது.

இது குறித்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர், “தமிழ்நாட்டிற்கான பிரத்யேக அறிக்கையை நாங்கள் அவர்களிடம் கேட்டுள்ளோம்” என்று கூறினார். இந்த அறிக்கையில் உள்ள பிற பரிந்துரைகள் மதிப்புள்ளதாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கை பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் லேசானதாக இருக்கும், ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா நோய்த் தொற்றுகள் அதிகரிக்கும் என்றும் அப்போது அதிக மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துவதற்கு பயன்படுத்த கட்டடங்களை அடையாளம் காண மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அதோடு, மருத்துவமனைகளிடம் பொது நோயாளிகளுக்கான சேவையையும் அறுவை சிகிச்சைகளையும் வெகுவாகக் குறைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்த சி.டி.டி.இ.பி வழிகாட்டுதல் அறிக்கை இந்திய இந்திய மருத்துவ சர்வே மாதிரிகளின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. இது இந்திய மக்களின் முகவர் அடிப்படையிலான மாதிரி ஆகும். விஞ்ஞானிகள் சீனா மற்றும் இத்தாலியில் இருந்து கிடைக்கக்கூடிய தரவுகளை கொரோனா தொற்றை அதிகம், மிதமானது, குறைவானது மூன்று சூழ்நிலைகளின் கீழ் பொருத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸின் சமூக பரவுதல் பெரும்பாலும் மார்ச் மாத தொடக்கத்தில் தொடங்கியதால், தேசிய கட்டுப்பாடு, இனி இந்தியாவுக்கு தேவையானதாக இருக்காது. மாநில உள்ளூர் கட்டுப்பாடு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களுடன் தொடர்புள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் சமூக பரவலைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சமூக விலகலை செயல்படுத்துவது கடினமானதாக இருந்தாலும் சமூக விலகல் இந்த அதிக பட்ச சுமையை 75% குறைக்கக்கூடும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆரம்பகால சோதனையை ஊக்குவிப்பதன் மூலம், மக்கள் சமூக விலகலை மிகவும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழைந்தைசாமி கூறுகையில், “கிருமிநாசினி தெளிப்பது மற்றும் கை சுகாதாரம் ஆகியவை சமூக விலகலோடு கடைபிடிக்க வேண்டும். இது முழு ஊரடங்கு முடக்கத்தைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

அதே நேரத்தில், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பது கொரோனா பாதிப்பு அளவை குறைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அனால், பல கொரொனா தொற்று நோய் பாதிப்பு எண்ணிக்கை பதிவு நம்மை எச்சரிக்கிறது.

மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறினால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் அதிகப்பட்சமாக 1 லட்சத்தை எட்டக்கூடும் என்பது நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. அதனால், அனைவரும் வீடுகளிலேயே இருந்து ஊரடங்கை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close