Covid-19 Cases Update: தமிழகத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களின் விற்பனை நேரத்தை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 வரை என நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவின் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. உதாரணமாக மார்ச் 31 அன்று இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 1,251 ஆக இருந்தது. இது, ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று 2,547 ஆக அதிகரித்தது. இந்தியாவில், 25 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் வழக்குகள் தப்லிகி ஜமாத் நடத்திய கூட்டத்தோடு தொடர்புடையவை.
மதச்சாயம் பூச வேண்டாம்: ஜே.பி நட்டா வேண்டுகோள்: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எந்தவொரு ‘மதச் சாயமும்’ பூச வேண்டாம் என்று தனது கட்சி பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய அலுவலக பொறுப்பாளர்களுடனான சந்திப்பில்,”கட்சியில் பொறுப்பில் இருக்கும் எவரும் ஆத்திரமூட்டும் (அ) மக்களைப் பிளவுபடுத்தும் கருத்தை கூறக்கூடாது. மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று ஜே.பி நட்டா கூறியதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Live Blog
Coronavirus News Updates: கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இம்மாதத் தொடக்கத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், தாராவில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 3072 ஆக உயர்ந்துள்ளது என்றும் கொரோனா பாதிப்பால் 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி, செவிலியர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சமூக விலகலைக் கடைபிடிக்க திருவண்ணாமலையில் ஏப்ரல் 7-ம் தேதி கிரிவலம் செல்ல தடை செய்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
எச்சில் மூலமாக கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால், புகையிலை பொருட்கள், குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்று நேரத்தை குறைத்து அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும் என்று தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 490 ஆக உள்ள நிலையில், அடுத்தபடியாக தமிழகதில் 485 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 14 வரை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்
அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய – அமெரிக்க உறவின் முழு வலிமையையும் பயன்படுத்த தலைவர்கள் உறுதி கூறியதாக தகவல்.
இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 74 பேர்களில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – பீலா ராஜேஷ்
தமிழகத்தில் ஏற்கெனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக இருந்து நிலையில் தற்போது 485 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தேனியைச் சேர்ந்தவரின் மனைவி கொரோனா பாதிப்பால் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் சாதி, மத பேதமின்றை அனைவரையும் தாக்கக்கூடியது – முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கான நேரத்தைக் குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை திறந்திருக்கலாம் என்ற நிலையில் அதன் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை
இந்தியாவில் 17 மாநிலங்களில் 1023 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் – மத்திய அரசு
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மேற்படிப்பு மாணவர்களை ஈடுபடுத்த திட்டம் – சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் – சுகாதாரத்துறை இணைச் செயலாளர்
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தொடர்புடையவர்கள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – மத்திய அரசு
மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் விளக்குகளை அணைக்க கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி 9 மணிக்கு தெருவிளக்குகளை அணைக்க கூடாது என மத்திய அரசு உத்தரவு.
அத்தியாவசிய மருத்துவ உகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கையுறை, முகக் கவசம், வெண்டிலேட்டர் ஆகிய அத்தியாவசிய உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவ செலவையும் ஏற்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை அறிக்கையை தினசரி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரில் வேலை செய்துவந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், அங்கிருந்து நடைபயணமாக இன்று திருச்சி வந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் 7 பேருக்கும் உணவு, தண்ணீர் வழங்கியதோடு பாஸ் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா உறுதியான கர்ப்பிணிக்கு இன்று பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் பரிசுத் தொகையை அறிவித்தார். இதமூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக விலகல் கொள்கையை பின்பற்றி, வீட்டுக்குள்ளே இருக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் போன்ற பொருட்கள் குலுக்கல் முறையில் பரிசாக அளிக்கப்படும் என்று தெரிவித்தார் .
உடல்நல பாதிப்புகள் அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் இல்லாதவர்கள், வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தும் வகையில் வீடுகளிலேயே தயாரிக்கப்படும் முகக்கவசங்களை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இது பொதுமக்களை பாதுகாப்பதற்கு உதவிகரமாக இருக்கும்…
வீட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு கவசங்கள் குறித்த வழிமுறைகள்: தமிழில்
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகம் தனது இரண்டாவது கொரோனா வைரஸ் மரணத்தை பதிவு செய்துள்ளது.
ஏப்ரல் 14க்குப் பிறகு, ரயில்வே சேவைகளை துவங்குவதற்கான வேலைப்பாடுகளை இந்திய ரயில்வே வாரியம் பரிசிலித்து வருகிறது. ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின் மண்டலம் வரியாக ரயில்வே சேவைகளை தொடங்குவதற்கான திட்டத்தை தயார் செய்து, அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்குமாறு ரயில்வே வாரியம் அதன் மண்டல வாரியங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழ்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி
தமிழ் சினிமா நடிகையான நயன்தாரா, கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா கலைஞர்களுக்காக FEFSI நிறுவனத்துக்கு ரூ. 20 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் எழுதிய “வாருங்கள், மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்போம்” என்ற கவிதை வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளளர்.
அஇஅதிமுக சார்பில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
முழு நிலவு நாளான வரும் 7ம் தேதியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
இந்த அவசர காலகட்டத்தில் விலகி நின்று ஒன்றிணைவோம் – நடிகை தமன்னா வேண்டுகோள்
கொவிட்- 19 சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் உலக சுகாதார அமைப்போடு இணைந்து சர்வதேச சோதனை முயற்சியில் ஈடுபட இருக்கின்றது. பொது சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த சோதனை முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் வரும் நாளை இரவு 9:00 மணி முதல் 0:09 மணி வரை வீட்டில் உள்ள மின்விளக்குகள் மட்டும் அணைக்க வேண்டும் என்றும், வீட்டில் உள்ள மின்சாதனங்கள் எதையும் அணைக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து மின் சாதனங்கள் அணைக்கப்பட்டு மீண்டும் போடப்பட்டால் மின்சார பிரச்னை வரும் என்று கூறப்படுகிறது.
இந்தியா போஸ்ட் ஏடிஎம் மூலமாக மட்டுமல்லாமல், ஏ இ பி எஸ் எனப்படும் (AEPS –Aadhar Enabled Payment System) ஆதார் உதவியுடனான பணப்பட்டுவாடா முறையைப் பயன்படுத்தியும், அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது தங்கள் வீடுகளில் இருந்தபடியே அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவோ, தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பொதுமக்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம். இது இந்தியா போஸ்ட் வழங்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பு சேவையாகும்.
பொதுமக்கள்; மருத்துவ, மருந்தாளுமை நிறுவனங்கள்; மின்னணு வணிக நிறுவனங்கள் போன்றவை, தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர மருத்துவ, மருந்துகள் தொடர்பான அத்தியாவசியமான மற்றும் உயிர் காக்கும் பொருட்களையும், அஞ்சலகங்கள் மூலமாக அனுப்பலாம். தொடர்புக்கு- 79755 45990 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
கொவிட்-19 முடக்கத்தின் போதும், தமிழக அஞ்சல் வட்டம், பொது மக்களுக்கு அடிப்படை அஞ்சல் மற்றும் நிதி சேவைகளை அளித்து வருகிறது. அஞ்சல் சேவை, முடக்க காலத்தின் போது அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகும். பொது மக்களுக்கும், தங்களது வாடிக்கையாளர்களுக்கும், அடிப்படை சேவைகளை வழங்குவதற்காக, அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்கள், தெரிந்தெடுக்கப்பட்ட உபஅஞ்சல் அலுவலகங்கள், மாநிலங்களில் உள்ள கிராமப்புற கிளை அஞ்சல் அலுவலகங்கள், ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த அஞ்சலகங்களை, பொதுமக்களும் வாடிக்கையாளர்களும், பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (மணியார்டர் அனுப்புதல்) மற்றும் இதர நிதி பரிவர்த்தனை சேவைகளுக்கு, பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏப்ரல் 3ம் தேதி மாலை 6 மணி நேர நிலவரப்படி, இந்தியாவில் 2,322 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 62-ஆக உயர்துள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது
ஊரடங்கின் போது பாதுகாப்பான இடைவெளியில் அறுவடை, விதைப்பு உள்ளிட்ட வேளாண் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தொடர்புடைய கள நிறுவனங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும்
மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில், கிட்டதட்ட 1,500 மரணங்களை பதிவு செய்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் ரிசோர்ஸ் மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் மொத்த எண்ணிக்கை 7,406 ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம், ஒரே நாளில் அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா நேற்று பதிவு செய்துள்ளது.
வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் திட்டமிடப்பட்டிருந்த ஃபிஃபா U-17 மகளிர் உலகக் கோப்பை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
நவம்பர் 2 முதல் 21 வரை, இந்தியாவில் ஐந்து இடங்களில் உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. கொவிட்-19 நோயின் விளைவுகளை ஆய்வு செய்யும்பொருட்டு ஃபிஃபா கவுன்சிலின் பணியகத்தால் நிறுவப்பட்ட ஃபிஃபா-கூட்டமைப்பு செயற்குழு இந்த முடிவை எடுத்தது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், மகப்பேறு, புற்றுநோய், டயாலிசிஸ், நரம்பியல் சிகிச்சை போன்ற அத்தியாவசிய சிகிச்சைகளை தனியார் மருதுவமனைகள் மறுக்கக்கூடாது. அவ்வாறு மறுத்தால் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.