Coronavirus outbreak Eight new cases in Kerala: கேரளாவில் 8 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் மார்ச் 31ம் தேதி வரை செயல்படாது. கேபினட் மீட்டிங்கை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் மக்கள் அதிகம் கூடும் கோவில் மற்றும் தேவாலய நிகழ்வுகளை தவிர்த்துவிடலாம். பூஜைகள் மற்றும் சடங்குகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றால் போதும் என்று கூறியுள்ளார்.
Advertisment
புதிதாக பதிவான கேஸ்களில், இத்தாலியில் இருந்து திரும்பிய குடும்பத்தினருடன் நேரடியாக தொடர்பு கொண்ட 6 பேருக்கு பாஸிட்டிவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், அந்த தம்பதியினரின் 91 வயது மற்றும் 88 வயது பெற்றோர்கள், அவர்களின் மகள் (32), மருமகன் (36) என்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து வந்தவர்களை ரிசிவ் செய்வதற்காக அவர்கள் கொச்சி விமான நிலையம் சென்றது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் அவர்களுடைய குடும்ப நண்பர்கள் இருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தம்பதியினரின் 4 வயது பேத்தி மற்றும் 80 வயது உறவினர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் இருந்து மார்ச் 7ம் தேதி கொச்சிக்கு திரும்பிய மூன்று வயது ஆண்குழந்தையின் பெற்றோர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கேரளாவில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,495 மக்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர். அதில் 259 பேர் மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisment
Advertisements
சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து
அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறுகையில் “ஆரம்பத்தில் இந்நோயின் தாக்கதால் பாதிக்கப்பட்ட இருவரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. அவர்களின் உயிரை காப்பாற்ற போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இத்தாலியில் இருந்து திரும்பிய தம்பதியினருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த பணி முடிவடையும் என்று அவர் கூறினார்.
பினராயி விஜயன் கருத்து
மேற்பார்வை, கண்காணிப்புகள் மட்டும் போதாது. மாநில அரசுடன் சேர்ந்து மக்களும் பணியாற்றினால் மட்டுமே இந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். மார்ச் 31ம் தேதி வரை நர்சரி பள்ளி முதல் கல்லூரிகள் வரை அனைத்தும் இயங்காது. 1 முதல் 7 வகுப்புகள் வரை தேர்வுகள் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். மதராஸா, தனியார் பள்ளிகள், அங்கன்வாடிகள், ட்யூசன்கள் என அனைத்துக்கும் இருந்து பொருந்தும் என்று கூறினார்.
இந்த மாதம் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் காலமாகும். திருமணங்கள், மதம் சார்ந்த விழாக்களில் அதிக அளவு மக்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்தால் நல்லது. சபரிமலை ஐயப்பன் சந்நிதி வருகின்ற 13ம் தேதி திறக்கப்பட உள்ளது. புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களை தடுக்க மாட்டோம். ஆனால் இது போன்ற சூழல் இருக்கும் போது வராமல் இருந்தால் நல்லது.
அனைத்து அரசு தொடர்பான நிகழ்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் நிகழ்ச்சிகள் ஏதும் நடத்த வேண்டாம் என்று பாதிரியார்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட உள்ளதால் புதுப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகிகளின் உதவியுடன் கொரோனாவைரஸ் பரவுதல் தவிர்க்கப்படுவதை அதி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது கேரளா அரசு. ASHA பணியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"