/tamil-ie/media/media_files/uploads/2020/09/corona-blood-clot-copy.jpg)
Coronavirus Tamil News: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் நாவல் கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகளும் ஆச்சரியங்களும் இன்றும் ஓய்ந்தபாடில்லை. இந்த கோவிட் 19 வைரஸ் உடலை எவ்வாறு தாக்குகிறது, அதனிடமிருந்து தானாகவே உடல் எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது உள்ளிட்ட தகவல்களை பல்வேறு நாடுகளில் உள்ள சுகாதாரத்துறை ஒவ்வொரு நாளும் புதிய சாத்தியக்கூறுகளை இன்றுவரை அறிவித்துக்கொண்டே இருக்கின்றன.
அவற்றுள், இந்த வைரஸ் தோற்று இருக்கும்போது இதயத்திற்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா மற்றும் இதயம் எவ்வாறு செயல்படும் என்பதும் அடங்கும்.
ரத்த உறைவு உள்ளவர்கள், எப்போதும் கடுமையான இருமல் மற்றும் இதய பகுதியில் கூர்மையான வலியை உணர்வார்கள். 'ரத்த உறைதல்' உடலில் இருக்கும் காயத்தின் இயல்பான வெளிப்பாடுதான். மேலும், அதிகப்படியான ரத்த இழப்பைத் தடுப்பதற்காக 'செமி-சாலிட்' அதாவது அரைத் திட நிலைக்கு ரத்தம் மாறும் என்று கல்யாண் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் மூத்த இருதய மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர். ஜாக்கியா கான் கூறுகிறார்.
"கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட 30 சதவிகித நோயாளிகளுக்கு இந்த கோவிட்-19, ரத்த உறைவிற்கு வழிவகுக்கிறது என்பதற்கான சான்றுகள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. கோவிட்-19 உள்ளவர்களின் உடலில் ரத்த உறைவு (த்ரோம்பஸ் என்றும் அழைக்கப்படுகிறது) ஏற்படும்போது உடலளவில் பல சிக்கல்கள் மற்றும் இறப்பு அபாயத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இந்த நோய்த்தொற்று 20-30 சதவிகித நோயாளிகளுக்கு மிகவும் மோசமான உறைதலை ஏற்படுத்துகிறது." என்கிறார் டாக்டர் கான்.
மேலும், ஆழ்ந்த நரம்புப் பகுதிக்குள் உருவாகும் ரத்த உறைவு மிகவும் ஆபத்தானவை என்றும் டாக்டர் கான் கூறுகிறார். இந்தக் கட்டிகள் தாங்களாகவே கரைந்து போகாமல் ரத்த ஓட்டத்தை நிறுத்தும் அபாயமும் உண்டு. சில சூழ்நிலைகளில், இந்த ரத்த உறைவு கட்டி உடைந்து உடலின் மற்றப் பகுதிக்குப் பயணிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. “இந்த த்ரோம்பஸ் இப்போது 'எம்போலஸ் (Embolus)’ என்று அழைக்கப்படுகிறது. எம்போலஸ் மூளை, இதயம் அல்லது நுரையீரலை அடைந்தால், அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும்.” என்கிறார் அவர்.
ரத்த நாளங்களை வரிசைப்படுத்தும் எண்டோதீலியல் (endothelial) உயிரணுக்களை கொரோனா வைரஸ் தாக்கும்போது உறைதல் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன என்று மருத்துவர் குறிப்பிடுகிறார். “இவை எண்டோதீலியல் சவ்வில் இருக்கும் ACE2 ஏற்பிகளுடன் பிணைப்பதன் மூலம் இந்த செயலை செய்கிறது. ஏற்பிகளுடன் வைரஸ் பிணைந்தவுடன், ரத்த நாளங்கள் ரத்தத்தை உறைவதற்குக் காரணமான புரதங்களை வெளியிடுகின்றன. கோவிட்-19 உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஓர் செயலற்ற அழற்சியாகத் தூண்டுகிறது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதுவே ரத்த உறைதலுக்கும் காரணமாக இருக்கலாம். கோவிட்-19 உள்ளவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படுவதில் வேறு பல காரணிகளும் உள்ளன.” என்கிறார் டாக்டர் கான்.
நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்தக் காரணிகளில் ஏதேனும் ஒன்றில் பாதிக்கப்பட்டாலும் கூட, ரத்த உறைவுக்கான பிற ஆபத்தும் அதிகம்:
*வயது முதிர்ச்சி
* பருமனான உடல்
* உயர் ரத்த அழுத்தம்
* நீரிழிவு நோய்
*ரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கும் மருந்துகள் உட்கொள்வது
* இதய செயலிழப்பு வரலாறு இருப்பது
* நீடித்த படுக்கை ஓய்வு போன்ற செயலற்ற காலங்களைக் கொண்டிருத்தல்
* சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
*புகைபிடிப்பவர் அல்லது புகைபிடித்த வரலாற்றைக் கொண்டவர்
* தனிப்பட்ட அல்லது குடும்ப வரலாறுகொண்ட டிவிடி (DVT) அல்லது நுரையீரல் தக்கையடைப்பு (Pulmonary embolism)
* ரத்த உறைவு பிரச்சனை உள்ளவர்கள்
இதயத்தின் ரத்தக் கட்டிகளால் ஏற்படும் சிக்கல்கள்:
"கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிகப்படியான ரத்த உறைவுகொண்டவர்களுக்கு, இந்த தொற்றினால் பல சிக்கலான பாதிப்புகள் ஏற்படலாம். ரத்த உறைவு செயல்பாட்டின் அதிக விகிதத்தைக் கொண்ட கோவிட்-19 நோயாளிகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படும் என ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. மேலும், தமனிகளில் ஏற்படும் ரத்த உறைவு மாரடைப்பு அல்லது பிற இதயப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். வுஹானில் உள்ள ஓர் மருத்துவமனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 187 நோயாளிகளை ஆய்வு செய்தபோது, 27.8 சதவிகித நோயாளிகளின் இதயம் வலுவிழந்துள்ளது" என்கிறார் டாக்டர்.
தற்போதைய மற்றும் வளரும் சிகிச்சை முறைகள்:
“ரத்தத்தை மெல்லிதாக்கும் மருந்துகளைப் பரிந்துரைப்பதே இதற்கான சிகிச்சை. ரத்த உறைவு அபாயத்தைக் குறைப்பதற்கான சிகிச்சையை, பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போதே தொடங்கி, பின் மருத்துவமனைவிட்டு வெளியேறிய இரண்டு வாரங்களுக்குப் பிறகும் தொடர்கின்றனர். இருப்பினும், ரத்தத்தை மெல்லிதாக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதனால் ரத்தப்போக்கு அபாயம் அதிகரித்து, அதிக ஆபத்து உள்ள நோயாளிகளுக்கு ரத்த மெலிவு மருந்து பொருத்தமற்றதாக மாறுகிறது.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க...
இயந்திர காற்றோட்டக் கருவிகள் பொருத்தக்கூடிய கோவிட்-19 நோயாளிகள், ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் உட்கொண்டவர்களைக் காட்டிலும், மருந்து எடுத்துக் கொள்ளாதவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. தற்போது, ரத்தக் கட்டிகளுக்கு சிகிச்சையளிக்கவும், தடுக்கவும் ஆராய்ச்சியாளர்கள் புதிய சிகிச்சை முறைகளைச் சோதித்து வருகின்றனர் ”என்கிறார் டாக்டர் கான்.
தடுப்புமுறை:
கை சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது மற்றும் உடல் ரீதியான தூரத்தைப் பின்பற்றுவது முதலியவை இந்த நாவல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என மருத்துவர் அறிவுறுத்துகிறார்.“ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டும். சில சந்தர்ப்பங்களில், ரத்தத்தை மெல்லிதாக்கும் மருந்துகளைப் பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைக்கலாம். இருப்பினும், இந்த மருந்துகள் அனைவருக்கும் பொருந்தாது.”
ரத்த உறைவு அபாயத்தைக் குறைக்க வேறு சில வழிகள் இதோ:
- முடிந்தவரைச் சுறுசுறுப்பாக இருப்பது
- ரத்த ஓட்டத்தை மேம்படுத்தச் சிறப்புக் காலுறைகளை அணிவது
- நீரிழப்பைத் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது
- தேவைப்பட்டால், உடல் எடையைக் குறைப்பது
- ஆல்கஹால் மற்றும் புகையிலை உட்கொள்வதைத் தவிர்ப்பது
இவற்றை தவறாது பின்பற்ற வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.