இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை ( மார்ச் 21ம் தேதி) மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு சுவாசம் சம்பந்தமான நிமோனியோ போன்ற நோய்கள் இருந்தால் கூட, அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு செல்லாதபோதிலும் அவர்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட சோதனைகளின்படி, வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களை நேரடியாக கண்காணித்து அவர்களை 5 முதல் 14 நாட்கள் கால அளவில் தொடர்ந்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை, நோய் தொற்று அறிகுறி இருந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று சோதனைகளை, தனியார் ஆய்வகங்களும் மேற்கொள்ளும் வகையில், மத்திய அரசு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அவர்களுக்கு ஒவ்வொரு சோதனைக்கும் ரூ.4500 வழங்கப்பட உள்ளது. தொற்றை கண்டறிய ரூ.1500ம், உறுதிப்படுத்துதல் சோதனைக்கு ரூ.3 ஆயிரம் என்ற வீதத்தில் வழங்கப்பட உள்ளது.இந்த சோதனைகளை நன்கு பயிற்சி பெற்று சான்றுரைக்கப்பட்ட டாக்டர்களே மேற்கொள்வர். அவர்கள் தொற்று உள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை கொண்டு சோதனை நடத்துவர்.
PCR சோதனைகளின் மூலம் பெறப்படும் சோதனைகளின் முடிவுகள் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு விடும். நெகட்டிவ் என்று தெரியவரும் சோதனைகளின் மாதிரிகளை அந்தந்த நேரத்திலேயே அப்புறப்படுத்தப்பட்டு விடும். இதுதொடர்பான விபரங்கள் யாரிடமும் பகிரப்பட மாட்டாது.
கொரோனா தொற்று தொடர்பாக இந்தியாவில் போதிய அளவு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், நிறைய சோதனைகளின் மூலமே, இந்த வைரசை வெல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தான் முக்கியமானவர்கள்
மத்திய சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், அவர்களின் மூலம் மற்றவர்களுக்கு அதிவேகமாக பரவுகிறது. மக்கள் நெருங்கிப்பழகுவதனால் நோய் தொற்று ஏற்படுவதாக இதுவரை எந்த ஆவணமும் இல்லை. சிகிச்சை சோதனை நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று உள்ள எந்தவொரு நபரும் தப்பித்துவிடக்கூடாது. இத்தகைய நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உடனடியாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அல்லது ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்பு திட்டக்குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல், நிமோனியா நோயாளிகளிடம் கொரோனா தொற்று இருப்பின் அவர்களை உடனே தெரியப்படுத்தவும்.
நாட்டில், தற்போது 111 அரசு சோதனை ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன.
நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் பால், இந்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் விஜயராகவன் தலைமையில், கொரோனா வைரஸ் சிகிச்சை மேம்பாடு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் டிபிடி, சிஎஸ்ஐஆர், டிஆர்டிஓ அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில், கோவிட் 18 சோதனை ஆய்வகங்களை அமைத்துள்ளன
இந்த ஆய்வகங்களில், அரசால் சான்றளிக்கப்பட்ட டாக்டர்களே சோதனைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மார்ச் 21ம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி 16021 பேரிடம் இருந்து 16911 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 315 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் (ICMR) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளை அதிகளவில் உற்பத்தி செய்யுமாறு பார்மா நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி நடத்திய வீடியோ கான்பரன்சில் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil