கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை ஏப்ரல் 14ம் தேதிக்குள் 2.5 லட்சம் என்ற அளவிற்கு அதிகரிக்குமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த ஹரியானா மாநில சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ராஜீவ் அரோரா கூறியதாவது, கடந்த புதன்கிழமை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது அன்றைய தேதி வரை கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய 1லட்சம் மாதிரிகளே எடுக்கப்பட்டுள்ளதாக தாங்கள் தெரிவித்த நிலையில், ஏப்ரல் 14ம் தேதிக்குள் 2.5 லட்சம் வரையிலான மாதிரிகளை சோதனை செய்ய அவர்கள் உத்தரவிட்டனர்.
ஏப்ரல் 9ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 1,44,910 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 30,299 மாதிரிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 1,135 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதியுடன் நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு நிலை முடிவடைய உள்ளது. இதனை நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஏப்ரல் 10ம் தேதியிலான கொரோனா பாதிப்பு நிலவரப்படி முடிவு எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், 2,964 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 2,017 கொரோனா தொற்று இல்லை என்ற பதில் கிடைத்துள்ளது. 791 மாதிரிகளின் சோதனை முடிவுகளுக்காக அம்மாநிலம் காத்திருக்கிறது.
ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்குமாறு டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஹரியானா சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் அரோரா மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா மாதிரி சோதனைகளில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். தங்கள் மாநிலத்தில் இதுவரை 3 ஆயிரம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 5 முதல் 6 நாட்களில் இதன் எண்ணிக்கையை 7 முதல் 7,500 வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஹரியானாவில் கொரோனா தொற்றின் ஹாட்ஸ்பாட்களாக விளங்கிவரும் குருகிராம் ,நு, பல்வால் மற்றும் பரிதாபாத் பகுதிகளிலிருந்து தலா 125 மாதிரிகள் என 450 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. பஞ்ச்குலா, பானிபட், அம்பாலா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தொற்று உள்ளவர்களை கண்டறிய, மாநிலமெங்கும் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்புளூயான்சா அறிகுறிகள் அல்லது சுவாச பிரச்னைகள் உள்ளவர்களை உடனடியாக பரிசோதிக்கும் வகையில் இந்த கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரை நாங்கள் 750 முதல் 800 மாதிரிகள் வரையே எடுத்திருந்ததாகவும், ஆனால் கடந்த 7 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் மாதிரிகள் வரை சேகரித்துள்ளோம். தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 400 மாதிரிகள் வரை சேகரித்து வருகிறோம்.
டில்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு ஹரியானா திரும்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
டில்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று பஞ்ச்குலா திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கைத்தால் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு தற்போது தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.