கொரோனா தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் - WHO சொல்வது என்ன?
WHO on Coronavirus vaccine : கொரோனா தடுப்பு மருந்தை, பணக்கார நாடுகள் ஏழை நாடுகள் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் எளிதில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருகிறது
கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளபோதிலும், அது மனிதர்களுக்கு 2021ம் ஆண்டுக்கு முன்னதாக கிடைக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisment
கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்ட அமைப்பின் இயக்குனர் மைக் ரையான் கூறியதாவது, கொரோனா தடுப்பு மருந்து சோதனை, சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை, 3ம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை எவ்விடத்திலும் தோல்வி ஏற்படவில்லை. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவே, தற்போது தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், சர்வதேச நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகளவில் இருந்து வருகிறது.
கொரோனா தடுப்பு மருந்து சோதனை சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. சோதனைகள் வெற்றி அளித்துள்ள நிலையில், 2021ம் ஆண்டின் முற்பகுதியில், மக்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால், தடுப்பு மருந்தை அதிகளவிற்கு உற்பத்தி பண்ண சர்வதேச நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
கொரோனா தடுப்பு மருந்தை, பணக்கார நாடுகள் ஏழை நாடுகள் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் எளிதில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
Pfizer Inc மற்றும் ஜெர்மன் பயோடெக் நிறுவனமான BioNTech தயாரித்துள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில், அமெரிக்க அரசு 100 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை, 1.95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க முன்வந்துள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராதநிலையில், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகே அந்தந்த நாடுகள், மாநிலங்கள் முடிவெடுக்க வேண்டும் என்று ரையான் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil