புதுச்சேரி பத்திரப்பதிவு துறையில் நடைபெறும் ஊழல், போலி பத்திரங்கள் பதிவு செய்வதை கண்டித்து இன்று மாவட்ட பதிவாளரை கண்டித்து (சாரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில்) உருளையன்பேட்டைதொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேருவும், பொதுநல அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தலைமையிலும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகராட்சி முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதியில் வசிக்கும் விதவை தாயின் மகன்களான அஸ்வின் சுந்தர் மற்றும் அனுராஜ் அவர்களின் சுமார் ஐந்து கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அரசியல் பலம் கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடு பத்திரப் பதிவு செய்து அந்த சொத்தை அபகரிப்பு செய்ய முயன்று வருகிறார்கள்.
இதில் ஒரு கட்டமாக அபகரிப்பாளர்கள் சொத்துக்கு உடைவர்களிடமே தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு "இந்த சொத்து சம்மந்தமாக பேச வேண்டும். இந்த சொத்தை நாங்கள் பத்திரபதிவு செய்து விட்டோம். இதுபற்றி பேச வேண்டும் நீங்கள் எங்களை சந்தித்து பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று பேரம் பேசுவதுபோல் மிரட்டி இருக்கிறார்கள். இதற்கான தொலைப்பேசி ஆடியோ உரையாடல் ஆதாரம் உள்ளது. மேற்கண்ட சொத்தை அபகரிப்பாளர்கள் பத்திரபதிவு செய்து இருப்பதை அறிந்த சொத்துக்கு உடையவர்கள் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட சார் பதிவாளரை நேரில் சந்தித்து எங்கள் சொத்தை எப்படி மற்றவர்களுக்கு பத்திரபதிவு செய்து கொடுத்தீர்கள். சொத்து கடைசியாக யார் பெயரில் இருக்கிறது என்று கூட பார்க்காமல் எப்படி போலியாக பத்திரபதிவு செய்கிறீர்கள்.
வில்லங்க சான்றை பரிசீலித்து (EC) பார்த்திருந்தாலே உங்களுக்கு தெரிந்து இருக்குமே. சொத்து கடைசியாக யார் பெயரில் இருக்கிறது என்று சார் பதிவாளரிடம் கேட்டுயிருக்கிறார்கள். எதற்கும் பதில் கூற முடியாமல் திணறிய சார்பதிவாளர் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நிலையில் சொத்தின் உரிமையாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்திருக்கிறார்.
ஊழலில் திளைத்துள்ள புதுவை பத்திரப் பதிவு துறை: மாவட்ட பதிவாளரை கண்டித்து எம்.எல்.ஏ முற்றுகை போராட்டம் #Puducherry pic.twitter.com/gaahUcZLKR
— Indian Express Tamil (@IeTamil) January 9, 2025
இது தொடர்பான காணொளி பதிவும் வெளிவந்தன. சார் பதிவாளர் செயல் பற்றி மாவட்ட பதிவாளரிடம் 28.11.2024 அன்றே சொத்தின் உரிமையாளர் புகார் மனு அளித்து இருக்கிறார். இதற்கு அலட்சியமாக பதில் கூறியதுடன் புகாரை பெற தாமதப்படுத்தியிருக்கிறார். இந்த சொத்தை அபகரிக்க அரசியல் பலம் மிக்கவர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் பதிவு துறை அதிகாரிகள் கூட்டு முயற்சியால் பத்திரபதிவு நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவந்துள்ளளது.
தற்போது புதுச்சேரி பத்திரபதிவு துறைக்கு மாவட்ட பதிவாளராக இருப்பவர் பெயரில் பல புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவர் பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டு லஞ்சம் பெறுவதில் குறியாக இருக்கிறார். இவர் பொறுப்புக்கு வந்ததில் இருந்து பத்திரபதிவு துறையில் பல போலி பத்திரங்கள் பதியப்பட்டதாக தகவல் வெளிவருகிறது. இறந்தவர்கள் பெயரில் உள்ள சொத்துக்களையும், வெளிநாட்டில் வசிப்பவர்களின் பூர்வீக சொத்துக்களையும் குறிவைத்து அபகரிக்கும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பத்திரபதிவு துறை துணை போகிக்கொண்டு இருக்கிறது என்பது உதாரணத்திற்கு அதிமுக கட்சியின் மகளிர் அணி துணை செயலாளராக இருந்த பிரியா என்பவர் கடந்த 2001ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இவரது பல கோடி ரூபாய் சொத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து இருக்கிறார்கள். இதுபற்றி அறிந்த சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் பாலமுருகன் தலைமை அதிகாரியான மாவட்ட பதிவாளரிடம் தெரியப்படுத்தி அபகரிப்பு செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்து இருக்கிறார்.
அந்த புகாரை கண்டுகொள்ளாமல் போலி பத்திரம் பதிவு செய்தவர்களுக்கு துணை போயிருக்கிறார் மாவட்ட பதிவாளர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மற்றும் துணைநிலை ஆளுநர் புகார் அளித்த பிறகு சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்துயிருக்கிறார்கள்.
இப்படி பல முறைகேடு நிகழ்வுகள் இந்த பத்திரபதிவு துறையில் நடந்துவரும் நிலையில் புதுச்சேரியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் சர்வரில் ஏற்படும் பிரச்சனைகளால் பத்திரபதிவு தடைபடுவது. கணினி சாதனங்களில் ஏற்படும் பழுதுகளால் பத்திரபதிவு தடைபடுவது. Generator வசதி இல்லாத நிலையில் மின்தடை ஏற்படும் நேரங்களில் பத்திரபதிவு தடைபடுவது போன்ற காரணங்களாலும் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராததாலும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இப்படி தங்கள் சொத்துக்களை பத்திரபதிவு செய்ய வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் பல நாள் காத்திருந்து பத்திரங்களை பதிவு செய்யும் அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து வந்து பத்திரபதிவு செய்பவர்கள் குறித்த நாட்களில் பத்திரபதிவு செய்யப்படாமல் பாதிக்கப்படுவதுடன் மன உளைச்சளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதனால் வெளிநாட்டில் வசிக்கும் பலபேர் பத்திரபதிவு செய்யாமலே திரும்பி சென்றிருக்கிறார்கள். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று பல முறை மாவட்ட பதிவாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தாளர்கள் மாவட்ட பதிவாளரை கண்டித்து 16.12.2024 அன்று போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
மாவட்ட பதிவாளரின் இப்படிப்பட்ட போக்கானது இவர் பணிபுரிந்த அனைத்து இடங்களிலும் எதிரொலித்து வந்து கொண்டு இருக்கிறது. உதாரணத்திற்கு இவர் கலால்துறையில் துணை ஆணையராக பணியாற்றிய போது தனியார் மதுபான தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மதுபான பாட்டில்களில் போலி ஆலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி வினியோகம் செய்து பல நூறு கோடி மோசடி செய்ததிலும் அரசு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்கு இவருக்கு பெரும் பங்கு உண்டு என்ற புகாரும் உள்ளது. அதேபோல கொரோனா காலத்தில் மதுக்கடைகளை மூடப்பட்டிருந்தபோது மொத்த மதுபான கடைகளின் மூலம் பல லோடு லாரியில் மதுபானங்கள் கடத்தல் செய்யப்பட்டத்தில் அரசுக்கு பலகோடி வரி ஏய்ப்பு நடந்ததிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்ற புகாரின் அடிப்படையில் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அம்மையார் இவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இவரை கலால்துறை ஆணையர் பதவியில் இருந்து நீக்கி காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு ஒரு ஐஓஎஸ் அதிகாரியை அந்த கலால்துறை ஆணையர் பதவியில் அமர்த்தி இது சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு இடையில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் மேதகு ஆளுனர் கிரண் பேடி அம்மையார் அவர்கள் மாற்றப்பட்டார். பிறகு சட்டமன்ற தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு அதிகார பதவிக்கு வந்தவர்களை நாடி அவர்களின் நட்பின் மூலமாக சட்டபேரவை செயலர் பதவியையும், சபாநாயகருக்கு தனி செயலாராகவும் பதவி ஏற்று கோலோச்ச ஆரம்பித்தார். இதுபோதாது என்று சுப்ரீம் கோர்ட்கே எனது அதிகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லை என்று கூறிக்கொள்ளும் அதிகாரம் மிக்கவர்களின் தலையீட்டின் பேரில் மாவட்ட பதிவாளர் பதவியையும் கேட்டு பெற்றுக்கொண்டு பத்திரபதிவு துறையில் பல முறைகேடுகளுக்கு துணை போய் கொண்டு லஞ்ச ஊழலில் ஈடுபட்டுக் கொண்டுயிருக்கிறார். இப்படிப்பட்டவர்களின் செயலால் பொதுமக்களின் சொத்துக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொண்டு வருகிறது.
இப்படிப்பட்ட மாவட்ட பதிவாளர் பத்திரபதிவு துறையில் இருப்பது வெட்ககேடானதுடன் வேதனையானது. இவர் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் செய்த முறைகேடுகளையும், தற்போது இவர் வகிக்கும் பதவிகளான சட்டபேரவை செயலாளர், சபாநாயகர் தனிசெயலர், மற்றும் மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் இருந்துகொண்டு இவர் இதுவரை செய்த முறைகேடுகளை விசாரிக்க ஏதுவாக ஐஏஎஸ் அதிகாரிகளின் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கு இடையில் தகுதியான அதிகாரியை மாவட்ட பதிவாளராக உடனடியாக நியமிக்க வேண்டும் என எம்.எல்.ஏ நேரு கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.