ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் எம்.டி மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ கடந்த வாரம் சந்தா கோச்சார், மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை அதிரடியாக கைது செய்தது. வீடியோகான் குழுத் தலைவர் வேணுகோபால் தூத் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். மூவரும் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோர் வீட்டு உணவு, மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் நாற்காலி, படுக்கை, மெத்தை ஆகியவற்றை சிபிஐ காவலில் பயன்படுத்த சிறப்பு நீதிமன்றம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) அனுமதி அளித்தது.
கோச்சாரின் வழக்கறிஞர் குஷால் மோர் கூறுகையில், “61 வயதான தம்பதியினர் இருவரும் மூத்த குடிமக்கள். அவர்கள் இரவில் மும்பை போலீஸ் லாக்கப்பில் தரையில் படுக்க வைக்கப்பட்டனர். கடும் குளிர் நிலவுவதால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும்” என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், சிபிஐக்கு சொந்தமாக லாக்-அப் இருப்பதால் இரவு நேரத்தில் போலீஸ் லாக்-அப்பிற்கு அனுப்புவதற்குப் பதிலாக அதில் வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாதிட்டார். இது தொடர்பாக தங்கள் மனுக்களை தாக்கல் செய்யுமாறு கோச்சாரின் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுக்கள் நேற்று (செவ்வாயன்று) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வீட்டு உணவு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், சிறப்பு படுக்கை, நாற்காலி, தலையணை, மெத்தை, துண்டு, போர்வை மற்றும் பெட்ஷீட் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரியது.
மேலும், சந்தா கோச்சார் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனைகளைப் பெற நீதிமன்றம் அனுமதி அளித்தது. விசாரணை முடியும் வரை தீபக் கோச்சார் ஒரு மணி நேரம் தனியாக தனது வழக்கறிஞரின் உதவியைப் பெற நீதிமன்றம் அனுமதித்தது. தூத்தின் மனு மீதான விசாரணையில், இன்சுலின் எடுத்துக்கொள்ளும் போது ஒரு உதவியாளரைப் பெற நீதிமன்றம் அனுமதித்தது. தொடர்ந்து, மூவருக்கும் 3 நாள் காவல் இன்று (புதன்கிழமை) முடிவடையும் நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதற்கிடையில், சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் தங்களை கைது செய்தது சட்டவிரோதம் எனத் தெரிவித்து சி.பி.ஐ நடவடிக்கையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/