மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கி சின்னத்தை வெளியிட்டார். அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, தேர்தல் ஆணைய அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார். அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மனு அளித்தார்.
தேர்தல் கமிஷனிடம் கட்சி தொடர்பான விளக்கங்களை அளித்த கமல்ஹாசன், நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து டீவீட்டிய ராகுல் காந்தி, "கமல் அவர்களை சந்தித்தது, மகிழ்ச்சியளிக்கிறது. இரு கட்சிகளைப் பற்றியும், தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைக் குறித்தும் பேசினோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
Thank you @RahulGandhi Ji for the time and inputs. Hope our conversation was useful to you as well. https://t.co/1WyvAQf4FK
— Kamal Haasan (@ikamalhaasan) June 20, 2018
இந்நிலையில், இன்று காலை சோனியா காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு செய்தியாளர்களிடம் பேசிய கமல், 'நேற்று ராகுல்காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து இன்று மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியை சந்தித்து பேசினேன். சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தியுடன் எதுவும் பேசவில்லை' என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.