ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களை அனுமதிக்க மறுத்த மேற்குவங்க கிராமத்தினர் அவர்களை புதுவிதமாக மரத்தில் பரண் அமைத்து தனிமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், புருலிய மாவட்டத்தில் உள்ள பாக்டி கிராமத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் கடந்த 5 நாட்களாக மரக்கிளைகளில்தான் வாசம். இந்த இளைஞர்கள் அனைவரும் 22 வயது முதல் 24 வயது உடையவர்கள்.
இவர்களுக்காக, ஒரு மாமரத்தில் 10 அடி உயரத்தில் மூங்கில் கழிகளைக் கொண்டு பரண்போல கட்டில் கட்டப்பட்டுள்ளது. அவர்களுடைய ஒவ்வொரு கட்டிலும் பிளாஸ்டிக் பாய், கொசுவலையால் மூடப்பட்டு உள்ளது. இந்த 7 பேருக்கும் தனித்தனியாக மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு துணி, 3 வேளை சாப்பாடு எல்லாமே மேலேயே கொடுக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் இயற்கை உபாதைகளுக்காக மட்டுமே கீழே வருகிறார்கள்.
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் மரத்தில் தனிமைப்படுத்தும் அளவுக்கு அப்படி என்ன தவறு செய்துவிட்டார்கள் என்றால் ஒன்றுமில்லை. எல்லாம் இந்த கொரோனா அச்சம்தான்.
சென்னையில் எலக்டிரிக்கல் கடையில் வேலை செய்துவந்த இந்த மேற்கு வங்க கிராம இளைஞர்கள் கொரோனா பரவல் அச்சம் எழுந்துள்ள சூழலில் சொந்த பாங்க்டிக்கு வந்தனர். மருத்துவர்கள் இந்த இளைஞர்களை தனிமைப்படுத்தி வைக்க கேட்டுக்கொண்டதால் கிராமத்தினர் இந்த 7 இளைஞர்களுக்கு மாமரத்தில் தனிமைப்படுத்தலுக்கு ஏற்பாடு செய்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களில் ஒருவரான பிஜய் சிங் லயா (24) இந்தியன் எக்ஸ்பிரஸிடம் போனில் கூறுகையில், “நாங்கள் எங்களுடைய பெரும்பாலான நேரத்தை மரத்திலேதான் கழிக்கிறோம். நாங்கள் உணவுக்காகவும் துணிகளை எடுப்பதற்காகவும், இயற்கை உபாதைகளுக்காகவும்தான் மரத்தில் இருந்து கீழே இறங்குகிறோம். நாங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். கிராமத்தினருக்கு ஆபத்தாக மாறவில்லை. கிராமத்தினர் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதை அப்படியே செய்கிறோம்.” என்று கூறினார்.
தாங்கள் அனைவரும் சென்னையி ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்ததாகவும் கடந்த சனிக்கிழமை ரயில் மூலம் காரக்பூர் வந்ததாகவும் பிஜய் சிங் லயா கூறினார். அங்கிருந்து புருலியா மாவட்டத்துக்கு பேருந்து மூலம் வந்த இந்த இளைஞர்கள் அடுத்து பலராம்பூருக்கு ஒரு வாகனத்தில் வந்தனர்.
கொரோனா வைரஸ் பரவலைப் பற்றி அறிந்திருந்த இந்த இளைஞர்கள் அனைவரும் தங்கள் கிராமத்துக்கு செல்வதற்கு முன்பு காவல் நிலையத்துக்கு செல்ல முடிவு செய்தனர்.
கிராமத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களில் ஒருவரான, பிமல் சிங் சர்தார் கூறுகையில், “நாஙக்ள் முதலில் பலராம்பூர் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்றோம். எங்களை விசாரித்த அதிகாரிகள் அங்குள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த மருத்துமனையில் மருத்துவர்கள், எங்களுடைய பெயர்களையும் போன் நம்பர்களையும் குறித்துக்கொண்டு எங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து, நாங்கள் கிராமத்துக்குள் நுழைந்தபோது, கிராமத்தினர் எங்களை தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் எந்த வாய்ப்புகளையும் கேட்க விரும்பவில்லை. கிராமத்திற்கு வெளியே ஒரு மாமரத்தில் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினார்கள்.” என்று தெரிவித்தார்.
கிராமத்துக்கு வெளியே ஒரு மாமரத்தில் இளைஞர்களுக்காக தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள கட்டில் ஒவ்வொன்றும் மழைபெய்தால் மழைத் தண்ணீர் உள்ளே வராமல் இருக்க பிளாஸ்டிக் பாய்களால் மூடப்படுள்ளது. இளைஞர்கள் கீழே இறங்கி வந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவும் துணிகளை துவைக்கவும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மரத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து, அந்த கிராமவாசி ஒருவர் கூறுகையில், “அவர்கள் கிராமத்திற்குள் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு வைரஸ் பரவலாம். அதுமட்டுமில்லாமல் எங்கள் வீடுகளில் சிறிய அறைகள் உள்ளன. சரியான தனிமைப்படுத்தல் அங்கு சாத்தியமில்லை. நாங்கள் மரத்தில் சரியான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்குகிறோம்” என்று கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட நிலைமை குறித்து தினோபந்து சிங் சர்தார் என்ற இளைஞர் கூறுகையில், “எங்கள் ஆடைகள் கிராமத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. எங்களுக்கு வேறு ஆடைகளும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் தினமும் துணிகளை துவைக்கிறோம். கிராமத்தில் இருந்து துணி துவைப்பதற்கு துணி பவுடர் கொடுத்திருக்கிறார்கள்.” என்று கூறினார்.
கிராமத்தினரால் இந்த இளைஞர்களுக்கு தனித்தனி பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு கொண்டு வருகிறார்கள்.
“யாரும் நம்மைத் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். பாத்திரங்களில் உணவு பரிமாறப்படும்போது கூட பாதுகாப்பான தூரத்தில் இருந்துதான் பரிமாறுகிறார்கள்” என்று பிஜய் சிங் லயா கூறுகிறார்.
கிராமவாசிகள் சுழற்சி முறையில் இளைஞர்களைக் கண்காணிக்கின்றனர்.
இந்த இளைஞர்கள் சென்னையில் ஒரு வாடகை அறையில் தங்கியிருந்ததாகவும் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ரூ.500 சம்பாதித்ததாகவும் தெரிவித்தனர்.
“எங்களுக்கு இந்த மாதம் 10-ம் தேதி சம்பளம் வர வேண்டும். ஆனால், அதற்கு முன்னர் நாங்கள் கிளம்பியதால், உரிமையாளர் எங்களுக்கு பணம் செலுத்தவில்லை. நாங்கள் வெறித்தனமாக வீட்டிற்கு வர விரும்பினோம், வெளியேறினோம் ... நாங்கள் ஒரு மரத்தில் இருந்தாலும் எங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பதில் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். 14 நாட்களுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் குடும்பங்களைச் சந்திப்போம்,” என்று தினோபந்து சிங் சர்தார் உருக்கமாகக் கூறினார்.
இந்த 7 இளைஞர்களின் குடும்பத்தினரும் கிராம மக்களுக்கு ஆதரவளித்துள்ளனர். “எங்களுக்கு சிறிய அறைகள் மட்டுமே இருக்கிறது பல குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். சரியான தனிமை இங்கே சாத்தியமா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இப்போது ஒரு மரத்தில் இருக்கிறார்கள். அதிகாரிகள் ஒரு சிறந்த ஏற்பாட்டை செய்ய வேண்டும்” என்று பிஜய் சிங் லயாவின் சகோதரர் ஜுதிஸ்திர் கூறினார்.
“இவர்களுக்காக பஞ்சாயத்தும் நிர்வாகமும் ஒரு இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றன. ஒருவேளை ஒரு அரசாங்க கட்டிடத்தில் அவர்கள் தனிமையில் வைக்கப்படலாம்” பாங்டி கிராம உள்ள பலராம்பூர் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் நிதாய் மோண்டோல் கூறினார்.
பலராம்பூரைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சாந்திராம் மகாடோ கூறுகையில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். அறிகுறிகள் உள்ள அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பகுதி அயோத்தி பஹார் அருகே உள்ளது, இதுபோன்ற பரண்கள்அசாதாரணமானது அல்ல. யானைகளைத் தேடுவதற்காக மக்கள் அவற்றைக் கட்டுகிறார்கள். நான் இந்த செய்தியைக் கேட்டிருக்கிறேன். இதில் நாம் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.